தேர்தல் விடயத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைளுக்காக நாம் கிராமங்களுக்கு செல்லும்போது தேர்தல் நடைபெறுமா என்று வாக்காளர்கள், ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே தேர்தல் விடயத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியாகவே நாம் இதனை பார்க்கின்றோம்.
தேர்தல் நடைபெற போவதில்லை, தேர்தல் இடம்பெறாது என்று மக்களை ஏமாற்றும்போது வேட்பாளர்களும் சோர்வடைந்து விடுவர். வாக்காளர்களும் தேர்தல் தொடர்பிலான ஆர்வம் இல்லாமல் போய்விடும். இறுதியில் மக்களின் ஆர்வம் இல்லாமல் போனதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக ஊடகங்களுக்கு முன்பாக வந்து கருத்துரைக்கின்றனர். மொட்டுக்கு கட்சிக்கு மீண்டும் வாக்களிப்பதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
நீர்கொழும்பு தொகுதியை எடுத்துக்கொண்டால் மொட்டுக்கட்சி சார்பாக எந்த வேட்பாளரும் முன்னிலையாகவில்லை.
எனினும் 20 சுயேச்சை குழுக்கள் போட்டியிடுகின்றன.