கொவிட் சூழல் காரணமாக ஜெனிவாவிற்கு செல்ல முடியாதுள்ளமையால் புலம் பெயர் உறவுகள் வலுச்சேர்க்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். எங்களுடைய போராட்டத்தினை ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி நடாத்தி வந்தோம். இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். இன்றைய தினத்தை துக்க தினமாக கொண்டாட இருந்தோம். கொவிட் பரவல் காரணமாக இந்த போராட்டத்தை இன்று செய்ய முடியாது போயுள்ளது. ஆனாலும் எமது உறவுகள் தத்தமது வீடுகளில் செய்கின்றனர். எங்களுடையை உறவுகள் வரும் வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து செய்வோம்.
கடந்த 3ம் மாதம் 12ம் திகதி யாருக்கும் தெரியாமல் OMP அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் ஆரம்பத்தில் திறக்கப்பட்ட காலம் முதல் அதனால் எமக்கு எவ்வித நன்மையும் இல்லை என்பதை கூறி வருகின்றோம்.
எங்களுக்கு OMP அலுவலகம் தேவை இல்லை என்பதை உறுதிபட சொல்கின்றோம். எமது உறவுகள் குறித்த அலுவலகத்தில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
அடுத்த மாதம் ஜெனிவா கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. அந்த கூட்டத் தொடரிலும் எமது உறவுகளுக்கு நீதியைக் கேட்டு நிற்கின்றோம். அதற்காக நீதி கோரி போராட்டம் லண்டனில் நடக்கின்றது. எமக்கு நீதிகோரி எமது உறவுகள் போராட்டத்தை நடார்த்துகின்றார்கள்.
எமக்கு நீதி பெற்றுத் தருமாறு ஜெனிவாவிடம் கேட்டு நிற்கின்றோம். தற்பொழுது உள்ள கொவிட் சூழல் காரணமாக ஜெனிவா கூட்டத் தொடரில் நாம் கலந்து கொள்ள முடியாதுள்ளது. அதனால் ஊடகங்கள் வாயிலாகவும், தொலைத்தொடர்புகள் ஊடாகவும் நாம் நீதி கேட்டு நிற்கின்றோம். எமது நீதிக்கான போராட்டத்திற்கு புலம்பெயர் உறவுகள் முன்னின்று எமது குரலாக வலுச் சேர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்