
பெலவத்தையில் மூன்று மாடி வீடொன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான ரொஷான் வன்னிநாயக்கவின் சடலத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானப் பரிசோதனையின் போது கோடீஸ்வர தொழிலதிபரின் இரத்தம் மற்றும் அவரது தாயாரின் இரத்த மாதிரிகள் என்பன பொரளை ஜின்டெக் நிறுவனத்தில் ஒப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெலவத்தை பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த வர்த்தகர் பெலவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடிகளைக் கொண்ட தனது சொகுசு வீட்டின் குளியல் தொட்டியில் மிதந்த நிலையில், இம்மாதம் 02 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸாரிடம் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்கமைய, சந்தேகநபர் வர்த்தகரை மூன்று மாடி வீட்டில் கட்டையால் அடித்துக் கொன்று குளியல் தொட்டியில் தள்ளியதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபருக்கு மேலதிகமாக, சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையின் பிரகாரம், நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு அமைய வர்த்தகரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.