யாழ். கலாசார நிலையம் இன்று கையளிப்பு! – ஜனாதிபதி, பிரதமருடன் இந்திய மத்திய அமைச்சரும் பங்கேற்பு

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, யாழ்ப்பாண கலாசார மையம்’ கையளிப்பு, இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன இன்று  மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

காலை 9 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொள்ளவுள்ளார்.

அவருடன் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார்.

இதன் பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் நடைபெறும்.

இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர நாள் ஊர்த்திப் பவனி நடைபெறும்.

இறுதியாக இரவு 7 மணிக்கு முற்றவெளியில் இசை நிகழ்வு நடைபெறும். இந்த இரு நிகழ்வுகளும் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“யாழ்ப்பாண கலாசார நிலையம்” யாழ்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தில் இந்திய அரசாங்கத்தின் முற்றும் முழுதுமான நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப கட்டத்தில் இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், இதன் நிர்மாணப் பணிகளின் முடிவில் அதன் நிர்வாகத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அதனை மத்திய புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு வந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வுக்கான சகல ஒழுங்குகளையும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வடக்கு மாகாண சபையுடனேயே இணைந்து மேற்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews