பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்குச் சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக பொருத்தப்பட்ட Hyundai Grand i10 மோட்டார் வாகனத்தைச் சந்தையில் அறிமுகம் செய்யும் நிகழ்வில் நேற்று (10.02.2023) கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வரி விதிப்பு செய்யப்பட்டது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அறியாமல் அல்ல என்றும், நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டு நடத்தும் நோக்கிலேயே அத்தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும், அதேபோல் வெகு விரைவில் நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும்.
நாட்டின் பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டு விடும் என்ற நம்பிக்கை இத்தகைய முதலீடுகளால் உறுதி செய்யப்படுகின்றது.
அத்துடன் Hyundai Grand i10 வாகனத்தைச் சந்தைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகள் எமது நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் உறுதி செய்யப்படுகின்றது.
இலங்கையிலுள்ள அபான்ஸ் ஒட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மோட்டார் வாகனம் சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலையொன்றில் பொருத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வாகனங்களைப் பொருத்துதல் மற்றும் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்தல் ஆகிய துறையில் இந்நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியொங், முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, அபான்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, ரெசி பெஸ்டொன்ஜி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.