யாழ்.மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன்,
மக்களின் சுய கட்டுப்பாடும் தடுப்பூசியுமே இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு வழியை உருவாக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
யாழ்.மாவட்டத்தின் கொரோனா நிலைமை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 135 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12285 எட்டியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை
சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பின் மூலமே கொரோனாப் பரவலை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர முடியும்.
மாவட்டத்தில் மூன்றாம் கட்ட சினோபாம் தடுப்பூசி வழங்கலின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றலுக்காக 2 லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும் கொரோனா மரணங்கள் அண்மை நாட்களாக அதிகரித்துவரும் நிலையில் தவறாது தடுப்பூசி ஏற்றலும் மக்களின் சுயகட்டுப்பாடுமே அனர்த்த நிலைமையில் இருந்து காப்பாற்றும்.
தடுப்பு ஊசி பெறாமல் வீடுகளில் தங்கியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்
வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை பிரதேச சுகாதார தரப்பினருக்கு தெரியப்படுத்தவும். மேலும் தற்போதைய கொவிட்நிலைமையை உணர்ந்து
அந்த ஆபத்திலிரந்து மீள்வதற்கு மக்கள் அனைவரும் வழங்கப்படும் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தடுப்பூசிகளையும் சுய கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்றினால்
வரப்போகும் பாரிய ஆபத்திலிருந்து தப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.