தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

அரசாங்கமானது தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்குமாயின், அதற்கெதிராக மக்களை அணித்திரட்டுவதற்கு தயங்கப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்கு அமைவாக, அரசியலமைப்புக்கு அமைவாக மக்கள் ஆணையை நிரூபிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கவில்லையாயின் மக்களுக்கு மாற்று நடவடிக்கைகளுக்கு செல்ல நேரிடும்.

மக்கள் அவ்வாறு மாற்று நடவடிக்கைகளுக்கு சென்றால் அவர்களை குறைக்கூற முடியாது.

தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையாயின் மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது.

இவ்விடயத்தில் மக்கள் வீதிக்கு இறங்குவதை தவறு என்று கூற முடியாது.

சர்வதேச நாணய நிதியமானது நிதியுதவியை வழங்கும் என்று நாம் பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

இந்த நிதி கிடைக்கும் என்று நாம் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது?

பங்களாதேஷானது சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரிய நிலையில் இரண்டு மாதங்களுக்குள் 4.9 பில்லியன் டொலரை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தில் எமது நாட்டின் நிலைமை என்ன? பல மாதங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பிலான தெளிவான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தெரிவிக்காததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைப்பது தாமதமாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைத்தால் அதனை வைத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற திட்டமிடலை அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கவில்லை.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இலங்கை மேலும் அதளபாதாளத்துக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

Recommended For You

About the Author: Editor Elukainews