
யாழ் மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று காலை 10 மணியளவில், முதல்வர் இம்மானுவல் ஆனோர்ல்ட் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடை பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த விவாத்தின் போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகளுக்கான வரி, மற்றும் இதர கட்டணமாக சுமார் 39 இலட்சம் ரூபா செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு கண்காட்சியை நடாத்துவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலுவையைச் செலுத்தாமல் அனுமதி வழங்குவதில்லை என்றும், மாநகர சபையினால் வழங்கப்படும் சுகாதார சேவைகள் உட்பட நலச்சேவைகள் எதனையும் வழங்குவதில்லை எனவும் சபையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.