வடமாகாண சுகாதார பணிப்பாளர் திலிப் லியனகே மற்றும் பிரதமர் செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோரை மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் உள்ள பிரபல தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போதே விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் வடமாகாண மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன் அவற்றை விரைவாக தீர்ப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் வடமாகாணத்தில் தகுதியான நிர்வாகத் தரமுடைய அதிகாரிகள் இருக்கும் நிலையில் வெளியிடங்களில் இருந்து தமிழ் மொழி தெரியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கு தகுதியானவர்கள் வட மாகாணத்தில் உள்ள நிலையில் அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
வடமாகாண சுகாதார பணிப்பாளர் தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம் வரை சென்றமை தொடர்பில் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன் வடக்கு சுகாதார பணிப்பாளரை விரைவாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.