ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனியார் சொத்துக்களை கையகப்படுத்துமென, சஜித் உட்பட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருவதை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மறுத்துள்ளார்.
1980ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜே.வி.பியின் கொள்கை அறிக்கையின் ஒரு பகுதியை மேற்கோள்காட்டி சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் இந்த விடயத்தை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எனினும் அடுத்து வந்த காலப்பகுதிகளில் ஜே.வி.பி காலப்போக்குக்கு ஏற்ப தமது கொள்கைகளை மாற்றியுள்ளது. எனவே சஜித் பிரேமதாச தமது தகவல்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
சஜித் பிரேமதாச உட்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்ற ஜே.வி.பியின் கொள்கை, 1979ஆம் ஆண்டு தமது மாநாட்டில் கொள்கை அறிக்கையாக அங்கீகரிக்கப்பட்டு 1980ஆம் ஆண்டு சோசலிச முகாம் மிகவும் வலுவாக இருந்தபோது வெளியிடப்பட்டது.
எனினும் 43 வருட இடைவெளியில், வலுவான சோசலிச முகாம் சரிந்தது. புதிய அரசியல் முகாம்கள் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ரஷ்யா போன்றவற்றின் அடிப்படையில் உருவாகின.
மக்களின் அபிலாஷைகள், தொழிநுட்பம், சந்தை, தகவல் தொடர்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறிவிட்டது.
இந்நிலையில், உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப 2000, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி பல புதிய செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.