
நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
கொழும்பு ரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியில் குறித்த பேருந்து நோட்டன்பிரிட்ஜ் டெப்லோ எனும் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது, பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதன்போது இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.