மகா மனிதனை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள்- சி.அ.யோதிலிங்கம்

தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயா பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் பேசியிருக்கிறேன் என விடுக்கப்பட்ட அறிவிப்பு தமிழ்நாட்டிலும், இலங்கையிலும,; புலம்பெயர் நாடுகளிலும் பலத்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. தாயகத்திலுள்ள மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய பரபரப்பைக் கொண்டுவந்தது எனக் கூறிவிட முடியாது. ஏற்கனவே பேசப்பட்டுவரும் விடயம் என்பதால் தாயக மக்களுக்கு இது புதிய செய்தியாகவும் இருக்கவில்லை. ஆனால் தென்னிலங்கையிலும் தமிழ் நாட்டிலும் முக்கிய விவாதத்திற்குரிய செய்தியாகவே இது பார்க்கப்படுகின்றது. தாயகத்தில் ஊடகங்களில் மட்டும் இது விவாதப் பொருளாகி உள்ளதே ஒழிய மக்கள் மத்தியில் பெரிதாக இல்லை. கடந்த வார வாரமலர் பத்திரிகைகளில் இந்த விவகாரமே அதிக இடத்தைப் பிடித்திருந்தது எனலாம்.

ஆனால் தமிழ்நாட்டிலும் தென்னிலங்கையிலும் பலத்த பரபரப்புக்குரிய விவகாரமாகவே இது பேசப்படுகின்றது. இலங்கை அரசு பிரபாகரன் உயிரோடு இல்லை என நியாயப்படுத்த தடுமாறுகின்றது. இலத்திரனியல் ஊடகங்களும் வலைத்தளங்களும் இதற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. துறைசார் நிபுணர்களுடன் இதுபற்றிய நேர்காணல்களும் இலத்திரனியல்ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. புலம்பெயர் நாடுகளிலும் ஒரு குழு மற்றைய குழுவைத் தாக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகின்றது.

தாயக தமிழ் ஊடகங்களில் இந்த அறிவிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியே அதிகம் பேசப்பட்டன. குறிப்பாக ரணிலின்; அரசியல் தீர்வுமுயற்சிகள் குழப்பமடையும,; சிங்களக் கட்சிகள் ஒருங்கிணையும். காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை தாமதப்படுத்தப்படும். காணாமல் போனவர்களது உறவுகள் நடாத்தும் போராட்டங்கள் பலவீனமடையும.; படைத்தரப்பின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அவர் உயிருடன் வந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்ற வகையிலேயே கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் பல மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களாகவும் உள்ளன. சிங்களக் கட்சிகள் புதிதாக ஒருங்கிணைய தேவையில்லை இனப்பிரச்சினை தொடர்பாக அவை ஏற்கெனவேயும் ஒருங்கிணைந்துதான் செயற்படுகின்றன. 13வது திருத்த விடயத்தில் கூட மொட்டுக் கட்சிகள், மைத்திரி, ஜே.வி.பி. தமது பழைய முகத்தைக் காட்டத்தவறவில்லை.

ஆயுதப் போராட்டம் தொடங்கினால் பலமாக இருக்கின்ற சிறீலங்கா இராணுவம் கடுமையாக இருக்கும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்டுகின்றன. இன்று ஒரு போருக்கு சிங்கள தரப்பும் தயாரில்லை. தமிழ் தரப்பும் தயாரில்லை என்பதே உண்மை நிலையாகும.; ஒரு தேர்தலை நடாத்துவதற்கே நிதிக்கு அல்லல்படும் சிறீலங்கா அரசு போருக்கு நிதியை செலவிடும் என நம்புவதே கடினமானதாகும். தமிழ்த்தரப்பும் போருக்குத் தயாரில்லை என்பது உண்மையாயினும் அதிலும் பார்க்க மேலான உண்மை தற்போதைக்கு தமிழ்த் தரப்பிற்கு ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்பதே. அரசியல் ரீதியாகவே உலகம்தழுவிய முன்னேறி செல்லக்கூடிய வாய்ப்புக்கள் தமிழ் அரசியலுக்கு உண்டு. தமிழ் அரசியல்வாதிகள் அதனை முன்னெடுக்கவில்லை என்பது வேறுகதை.

நுணுக்கமாக அவதானிப்பின் நெடுமாறன் ஐயாவின் அறிவிப்புக்கு பல காரணிகள் உண்டு எனலாம். அதில் முதலாவது நெடுமாறன் ஐயா இதனை புதிதாக கூறவில்லை. 2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் இருந்தே கூறிவருகின்றார். இந்தத்தடவை ஒரேஒரு வேறுபாடு பிரபாகரனின் குடும்பத்துடன் தான் நேரடியாகப் பேசியுள்ளேன் எனக் கூறியமையாகும். இந்தக் கூற்றைவைத்துக்கொண்டு நெடுமாறன் ஐயாவுக்கு விழும் கல்லெறிகள் கொஞ்சநஞ்சமல்ல. இக் கல்லெறிகள் அவருக்கு மட்டுமல்ல அவருடன் இணைந்து ஊடக மாநாட்டை நடாத்திய காசி ஆனந்தனுக்கும் விழுந்துள்ளன. நெடுமாறன் ஐயா விவகாரத்தில் சற்று நிதானமாக கருத்துச் சொல்வதே தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானது.

நெடுமாறன் ஐயா ஒரு தமிழ்த் தேசியத் துறவி. ஈழவிவகாரத்தை அவர் கையிலெடுத்தபின் முன்னாள் காங்கிரஸ்காரரான அவர் கட்சி அரசியலிலோ, தேர்தல் அரசியலிலோ ஈடுபடுவதில்லை. அவரது முழு அக்கறையும், செற்பாடும் ஈழப் போராட்டம் பற்றியதுதான். பல தடவை அதற்காக சிறையும் சென்றிருக்கின்றார். பிரபாகரன்மீது அதீத பற்றுகொண்டிருக்கின்றார். ஒரு வகையில் பிரபாகரன் மீது அதீத பக்தி உடையவர் எனலாம். அந்தப் பக்தி காரணமாக பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் என அவர் கருதியிருக்கக்கூடும.; இங்கே பக்தர்கள் முருகனுடன் பேசுவது போல அவரும் பிரபாகரனுடன் பேசியிருக்கலாம். முருக பக்தன் ஒருவனுக்கு முருகன் இல்லை என்பதை எப்படி நம்பமுடியாதோ அதேபோல பிரபாகரன் இல்லை என்பதையும் நெடுமாறன் ஐயாவால் நம்ப முடியாது. நம்பிக்கை சார்ந்த விடயமொன்றிற்கு சான்றுகள் தேடுவது இலகுவானதல்ல.

இரண்டாவது காரணம் புலம்பெயர் சக்திகளில் ஒரு தரப்பினரின் பிரச்சாரமாகும். 2009ம் ஆண்டிலிருந்தே பிரபாகரன் உயிரோடுஉள்ளார் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஒட்டி புலம்பெயர் தரப்பின் புலிச் செயற்பாட்டாளர்கள் 2009லிருந்தே இரண்டாகப் பிரித்திருந்தனர். பிரபாகரன் உயிரோடு இல்லை. ஏனைய முக்கிய தளபதிகளும் இறந்துள்ளனா.; இனிப் புலிகள் இல்லாத காலத்திற்குரிய புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றவகையிலேயே நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டது. இவ் அரசின் பிரதிநிதிகளுக்கான தேர்தலும் புலம்பெயர் மக்கள் மத்தியில் நடாத்தப்பட்டது. இதற்குப் போட்டியாக பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார்; புதிய அரசியல் தேவையில்லை. புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியைப் பேணலாம் என்ற வகையில்தான் அனைத்துலக மக்களவை உருவாக்கப்பட்டது. அதுவும் புலம்பெயர் மக்கள் மத்தியில் தனது பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடாத்தியிருந்தது. தேர்தல்கள் ஒரேயொரு தடவை மட்டும்தான் இடம்பெற்றன. பின்னர் உள்மட்ட தெரிவுகள் மட்டும்தான்.

புலம்பெயர் தரப்பில் தமிழ் மேட்டுக்குடிகள் தற்போதும் நாடுகடந்த தமிழீழ அரசுடனும், சுமந்திரனுடனும் தங்களை அடையாளப்படுத்துகின்றனர். சாதாரண மக்கள் தான் அனைத்துலக மக்களவையுடன் உள்ளனர். புலம்பெயர் சதாரண மக்கள் மத்தியில் செயற்பட வேண்டுமானால் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறவேண்டும், தமிழீழக் கோரிக்கையையும் கைவிடாது முன்வைக்க வேண்டும். இது அங்கேயுள்ள யதார்த்தம். இந்தத் தரப்பின் பிரச்சாரங்களும் நெடுமாறன் ஐயாவை பேசவைத்திருக்கலாம். எனினும் இந்தத் தடவை அனைத்துலக மக்களவை சற்று அடக்கியே வாசிக்கின்றது.

மூன்றாவது இந்திய மத்திய அரசின் தூண்டுதலாக இருக்கலாம.; கொழும்பில் பௌத்த பிக்குமார் 13வது திருத்தத்தை எரித்தமையை இந்தியா ஏற்கவில்லை. இது ஒரு வகையில் இந்தியாவையே எரிர்த்தமைக்கு சமனாகும.; இந்த எரிப்பு காரணமாக நெடுமாறன் ஐயா ஊடாக இந்திய மத்திய அரசு ஒரு செய்தியை இலங்கை அரசிற்கு சொல்ல முயற்சித்திருக்கலாம். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் பிரபாகரனையும் உயிர்ப்பிப்பேன் என்பதே அந்தச் செய்தியாகும்.

இலங்கை அரசைக் கையாள்வதில் இந்திய அரசு தொடர்ச்சியாக தோல்விகளையே தழுவி வருகின்றது. தமிழ் அரசியலைக் கையாள்வதிலும் இந்தியாவிற்கு தோல்விதான். தொடர் தோல்விகள் இலங்கையில் இந்தியாவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும். இந்தியாவின் இருப்பு கேள்விக்குள்ளாகுமானால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பே கேள்விக்குள்ளாகும். எனவே நெடுமாறனுக்கூடாக இலங்கையை அச்சுறுத்தி தனது நிகழ்சிநிரலை முன்நகர்த்த இந்தியா முயற்சித்திருக்கலாம்.

இதிலும் ஒரு உண்மை இருப்பதுபோலவே தெரிகின்றது. அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே அமெரிக்கா புலனாய்வுப்பிரிவு போர் விமானத்தில் இலங்கை வந்து திரும்பியிருக்கின்றது. விமானநிலையத்தில் கடவுச்சீட்டு எதுவும் சோதிக்கப்படாமல் அமெரிக்க புலனாய்வுகுழுவினர் இலங்கைக்குள் வந்துள்ளனர். இவர்களது வருகையை ஒட்டி கட்டுநாயக்கா – கொழும்பு பெரு வீதியும் மூடப்பட்டு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் யாரிடம் என்ன பேசினார்கள் என்பது வெளிவராமலே அவர்கள் திரும்பியுள்ளனர். திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பொறுப்பேற்கப்போவதாக செய்திகள் வருகின்றன. தற்போது சீனா கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தால் கூட சர்வதேச நாணயநிதியம் கடன் உதவியை வழங்கப்போவதாக இன்னோர் செய்தி வந்திருக்கின்றது.

13வது திருத்தத்தை தமிழ் மக்களிடம் விற்பது கடினம். அதையே சிங்களத் தரப்பு கொடூரமாக எதிர்க்கின்றது என்பது இந்தியாவிற்கு பாரிய எரிச்சலை ஊட்டியுள்ளது. இதனால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய செய்தியை கொடுக்கவேண்டிய தேவையும் இந்திய மத்திய அரசிற்கு உண்டு. நெடுமாறனின் அறிவிப்பு தமிழ்த் தரப்பிற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் எனவும் இந்தியா கருதியிருக்கலாம்.

தமிழ் அரசியலை பொறுத்தவரை தமிழரசுக் கட்சியின் தீர்மானம் எடுக்கும் நிலையிலுள்ள சம்பந்தனும் சுமந்திரனும் இந்தியாவோடு இல்லை. கஜேந்திரகுமார் கட்சியும் இந்தியாவுடன் இல்லை. போதாக்குறைக்கு விக்கினேஸ்வரனின் கட்சியும் விலகியே நிற்கின்றது. தற்போது இந்தியாவுடன் நிற்கும் ஒரேயொரு குழு குத்துவிளக்குக்காரர்கள் மட்டும்தான். இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் அரசியலை ஒருபோதும் கையாள முடியாது.

எனவே தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த அறிவிப்பு இருக்கலாம். 2009க்கு பின்னர் ஒரு தேக்க நிலையில்தான் தமிழ்த் தேசிய அரசியல் இருக்கின்றது. இங்கு கட்டுறுதியான ஒரு அரசியலோ, அரசியல் இயக்கமோ, அரசியல் தலைமையோ இல்லை. மறுபக்கத்தில் தேர்தல் அரசியலுக்குள்ளும் கட்சி அரசியலுக்குள்ளும் தமிழ்த்தேசிய அரசியல் மாட்டுப்பட்டுக் கிடக்கின்றது.

தேசிய அரசியல் செயற்பாடு என்பது ஒரு வகையில் அஞ்சலோட்டம் தான். தமிழ் அரசியல் வரலாற்றில் முதல்முதல் ஓடத்தொடங்கியவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம்தான். அவர் தடியை ஜி.ஜி. பொன்னம்பலத்திடம் கொடுக்க அவர் செல்வநாயகத்திடம் கொடுத்தார். தந்தை செல்வா அதனை பிரபாகரனிடம் கொடுத்தார். பிரபாகரனுக்குப் பிறகு தடியை வாங்க பொருத்தமானவர்கள் கிடைக்கவில்லை.

அருணாசலத்தின் அரசியலைவிட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அரசியல் முன்னேற்றகரமாக இருந்தது. இவரின் அரசியலைவிட தந்தை செல்வாவின் அரசியல் முன்னேற்றகரமாக இருந்தது. தந்தைசெல்வாவின் அரசியலைவிட பிரபாகரனின் அரசியல் முன்னேற்றகரமாக இருந்தது.

எனவே புதிய அரசியல் பிரபாகரனைவிட முன்னேற்றகரமாக இருக்கவேண்டும் ஆனால் யதார்த்தத்தில் தந்தை செல்வாவின் அரசியலைக்கூட தற்போதைய அரசியல் சக்திகளினால் பின்பற்ற முடியவில்லை.
தற்போது தமிழ் மக்கள் ஒரு மகா மனிதனைத் தேடுகின்றனர். அந்த மகா மனிதன் பிரபாகரனுக்கு மேலானவராக இருக்க வேண்டும். வரலாற்று நிர்ப்பந்தம் இதுதான்.

திருத்தம்
சென்றவாரக் கட்டுரையில் இரண்டாவது குடியரசு யாப்பு 1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும,; சிறீமாசாஸ்திரி ஒப்பந்த அமூலாக்கச் சட்டம் 1964ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது. அதனை இரண்டாவது குடியரசு யாப்பு 1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சிறீமா-சாஸ்திரி ஒப்பந்த அமூலாக்கச் சட்டம் 1967இல் கொண்டுவரப்பட்டது என்றும் திருத்தி வாசிக்குமாறு தாழ்மையாக வேண்டுகின்றேன். தவறுக்கு மன்னிக்கவும். – கட்டுரையாளர்.

Recommended For You

About the Author: Editor Elukainews