யாழ்.சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை பகுதிகளில் 30 இடங்களில் நுாதன முறையில் பண மோசடி..!

யாழ்.சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் முதியவர்களை இலக்குவைத்து சுமார் 30க்கும் மேற்பெட்ட பண மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மேற்படி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபர் ஒருவர், தான் அப்பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர் என அறிமுகப்படுத்திக்கொண்டு,

வீடுகளுக்குள் சென்று சமுர்த்தி உதவிகளை பெற பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்காக பணம் செலுத்த வேண்டும் என கூறி 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையில் வாங்கி மோசடி செய்துள்ளார்.

அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பிள்ளைகள் வேலைகளுக்கு சென்ற வேளைகளில், வீடுகளில் முதியவர்கள் தனித்து இருக்கும் வேளைகளை பயன்படுத்தி வீடுகளுக்குள் சென்று ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார்.

சிலர் அது தொடர்பில் வேலையில் உள்ள பிள்ளைகளுடன் கதைத்து பணம் வாங்க வேண்டும் என கூறிய போது, வேலையில் உள்ள அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் நான் நாளை வருகிறேன் என கூறி அங்கிருந்து நழுவி சென்றுள்ளார்.

சில வீடுகளில் தம்மிடம் அவ்வளவு தொகை இல்லை என்றவர்களிடம் உங்களிடம் உள்ளதை தற்போது தந்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள், மிகுதியை நான் நாளைக்கு வாங்குகிறேன்.

ல்லை எனில் எனது அலுவலகத்திற்கு வந்து மிகுதியை தாருங்கள் என கூறி பணத்தை பெற்றுள்ளார். 

அது மாத்திரமின்றில் ” சமுர்த்தி கொடுப்பனவு” என விண்ணப்ப படிவம் ஒன்றினையும் வழங்கி அதனை பூரணப்படுத்தி, அவர்களிடம் கையொப்பமும் வாங்கியுள்ளார்.

குறித்த மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவு பெற பணம் செலுத்த தேவையில்லை எனவும்,

இவ்வாறு எவரேனும் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீடுகளுக்குள் வந்தால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கோ, கிராம சேவையாளருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews