பாகிஸ்தான் கடற்படைத் தளபதி- இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு

இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசி, நேற்று இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இதன்போது பாகிஸ்தானிய கடற்படைத் தளபதிக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைய கௌரவ மரியாதை வழங்கப்பட்டதோடு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால உறவை நினைவுபடுத்தும் வகையில், இரு நாட்டு கடற்படைகளுக்குமான முக்கிய பல விடயங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துரையாடியதோடு, நல்லுறவு மற்றும் நட்புறவைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கடற்படைத் தளபதி மற்றும் முகாமைத்துவ சபையுடன் புகைப்படமெடுத்துக்கொண்ட அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி, இலங்கை கடற்படைத் தளபதி அலுவலகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாகிஸ்தானிய கடற்படைத் தளபதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைத் தலைவர், இராணுவத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொண்டார்.

மேலும் கிழக்கு கடற்படை மற்றும் திருகோணமலையில் கடற்படை கடல்சார் அகடமியையும் பார்வையிடவுள்ள அட்மிரல்,
இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இலங்கைக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, முஹம்மட் அம்ஜத் கான் நியாசி, பெப்ரவரி 28 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews