ஆட்சியாளர்கள் நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களே அன்றி உரிமையாளர்கள் அல்லர் என்றும் நாட்டை தமக்கு தேவையான வகையில் நடத்தி செல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருணாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தற்காலிக நிர்வாகப் பொறுப்பு தேர்தலின் பின்னர் மாறுபடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒரு அரசியல்வாதிக்கு ஆட்சி நிர்வாகத்தில் சிறந்த விடயப்பரப்பு, சிறந்த புரிதல் இருக்க வேண்டும். அந்த புரிதல், கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாக பிரயோகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான திறமை இருக்க வேண்டும்.
யார் என்ன கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் சந்தை சக்திகளை அடிப்படையாகக் கொண்ட மனிதநேய முதலாளித்துவத்தைப் பின்பற்றுகின்றது.
ஒரு நாட்டின் செல்வத்தை அரசால் அன்றி, தனியார் துறையாலையே உருவாக்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் செல்வம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
மாற்றுத் தரப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் உண்மையான மாற்றுத் தரப்பு யார் என்பது மக்களுக்குத் நன்றாக தெரியும்.