போரின் முதற் பலி உண்மை மட்டுமல்ல, பெண்ணுந்தான். தாயாக, மகளாக, மனைவியாக, அப்பம்மாவாக, அம்மம்மாவாக, இன்னபிறவாக போரில் முதலில் பலியாவது பெண்தான்.போரில் ஆண்களுக்கு தண்டனை மரணம்,காயம்,அல்லது சித்திரவதை. ஆனால் பெண்களுக்கு மேலதிகமாக பாலியல் தண்டனையும் உண்டு.அவள் பெண் என்பதற்காக பாலியல் ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறாள்.
தாயாக அவள் போர்க்களத்தில் நிற்கும் பிள்ளைகளுக்காக விரதம் இருக்கிறாள். பசித்திருக்கிறாள்;விழித்திருக்கிறாள்;தாகமாய் இருக்கிறாள்;காயங்களோடே தனித்துமிருக்கிறாள்.ஆயுத மோதல்கள் முடிந்த பின்னரும் அவள் காணாமல் போன தன பிள்ளைகளுக்காக ஆண்டுக் கணக்காக தெருவோரங்களில் நிற்கிறாள்.
இவ்வாறாக போரில் தனித்துவிடப்படும் ஒரு தாயை மையப்பாத்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டதே மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம். ஒரு தாயின் நோக்கு நிலையிலிருந்து எடுக்கப்பட்ட படம் அது. ஒரு தாயாக, மாமியாக,அப்பம்மாவாக, ஒரு முதிய பெண் எவ்வாறு போரைப் பிரதிபலிக்கிறாள் என்பதனை படம் சித்திரிக்கின்றது.
ஒரு தாயின் நோக்கு நிலையில் இருந்துதான் போர் பார்க்கப்படுகிறது. ஒரு தாயின் பயம்,காயம், பரிதவிப்பு,நிராசை.அப்பாவித்தனம் போன்றவற்றுக்கூடாக போர் காட்டப்படுகிறது.ஒரு தற்காலிகக் குடியிருப்பில் அமைக்கப்பட்ட ஒரு மூடிய பதுங்குகுழியை மையமாகக் கொண்டு கதை பெருமளவுக்கு நகர்த்தப்படுகிறது.அந்த மையப்பாத்திரத்தின் ஒரு பேரன் போரில் நிற்கிறான்.போர்க்களத்தில் நிற்கும் பிள்ளையின் தகப்பனான அவளுடைய மகன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் காட்டுப்பாட்டு எல்லையை நோக்கிப்போக முயற்சிக்கிறான்.மற்றொரு மகன் படைத்தரப்பிடம் சரணடையப் போகிறான்.இவ்வாறு இரண்டு பிள்ளைகளுக்கும் இடையே கிழிபடும் ஒரு தாயை மதிசுதா படமாக்கி இருக்கிறார்.
இறுதிக்கட்டப் போரில்,ஒன்றில் பதுங்கு குழிகளை அல்லது பிணக் குழிகளை வெட்டிக் கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தைப் படம் பிரதிபலிக்கின்றது. எனினும்,போர்க்களத்தில் நின்ற எல்லாத் தரப்புகளையும் படம் பிரதிபலிக்கிறது என்று சொல்லமுடியாது.எல்லாத் தரப்புகளினுடைய அரசியல் நியாயங்களையும் படம் பிரதிபலிக்கிறது என்றும் சொல்ல முடியாது. குறிப்பாக ஒரு சிறிய கூட்டுக்குடும்பத்தை அக்குடும்பத்தின் தலைவியாகக் காணப்படும் முதிய, காலில் காயமடைந்த, பெருத்த சரீரத்தை கொண்ட ஒரு தாயைச் சுற்றிப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தாய்மாரின் துக்கம்,தனிமை,அப்பாவித்தனமான ஆசைகள் போன்ற எல்லாவற்றையும் படம் கொண்டுவருகிறது.தாய்மாரின் துக்கம் உலகளாவியது…தேற்றப்படவியலாத் தாய்மாரின் பிரார்த்தனைகளும் பரிதவிப்பும் உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியானவை.தேற்றப்படவியலாத் தாய்மாரின் துக்கம் உலகின் எல்லா பதுங்குகுழிச் சுவர்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.அடுப்படிக் கறுப்பில் அவர்களுடைய நிராசைகள் ஒட்டிக்கொண்டிருப்பதைப்போல.
மதிசுதாவின் மையப்பாத்திரமும் அப்படித்தான்.இரண்டு பிள்ளைகளுக்கும் இடையே கிழிபடும் ஒரு தாய் அவர்.மக்கள் படையில் இணைந்து பயிற்சி பெற்று பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.அதேசமயம் பேரக்குழந்தைகளை பதுங்கு குழிக்குள் வைத்து திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் ஒரு பேத்தியும் அவர். ஆனால் இறுதியிலும் இறுதியாக இரண்டு பிள்ளைகளும் தங்களுக்கு பாதுகாப்பானது என்று கருதும் திசைகளை நோக்கி இடம்பெயர,இம்முதிய தாய் பதுங்குகுழிக்குள் சில காய்ந்த ரொட்டிகளோடு தனித்துவிடப்படுகிறார்.பைபிளில் கூறப்பட்டதுபோல பிள்ளைகளைப் பெற்றும் மலடி ஆகிறார். எனினும்,அக்குடும்பத்தோடு நெருங்கிப் பழகிய ஒரு மருத்துவப் போராளி தற்செயலாக அப்பதுங்குகுழிக்குள் வருகிறார்.மிகுதிக் கதையை இதற்கு மேல் சொல்லாமல் விடுகிறேன்.ரசிகர்கள் திரையில் பார்க்கட்டும்.
சமூகப் பங்களிப்போடு, கைபேசிக் கமராவால் எடுக்கப்பட்ட ஒரு படம் அது.கைபேசி கமராவுக்குள்ள அதியுச்ச சாத்தியக்கூறுகளை மதிசுதா குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்.எனினும் சில இடங்களில் கமரா கண்ணுக்கு வேதனையாக இருக்கிறது.
மையப் பாத்திரம் நிதானமாக நடிக்கிறார். ஒரு பெருந் தேகியான பெண் அவர்.காலில் காயப்பட்டிருக்கிறார்.ஆனாலும் தலைமைத்துவ பண்புமிக்கவர்.ஒரு தாயாகவும் தலைவியாகவும் மனதில் பதிகிறார்.உதிரிப்பூக்கள் மகேந்திரனை நான் முதன்முதலாக கண்டபோது உரையாடலின் போக்கில் அவர் சொன்னார் “நடிப்பு என்பது நடிக்காமல் இருப்பதுதான்” என்று.அந்தப் பெண் அதை செய்கிறார்.படத்தின் முடிவில் அவர் பின்வருமாறு கூறுகிறார்…”ராசா என்ர பேரனிட்டை ஒண்டு சொல்லி விடுறியே……வெற்றியோ தோல்வியோ இந்தச் சண்டையை இதோட முடிச்சிடச் சொல்லு……போர் எண்டுறது பொல்லாதது”
அது இறுதிக்கட்டப் போரில் பதுங்குகுழிக்குள் பிரார்த்தனைகளோடு தனித்துவிடப்பட்ட அன்னையரில் ஒரு பகுதியினரின் குரலுந்தான்.