
நன்னீர் மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேராலை கிராம மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கிராமத்தில் அமைந்துள்ள புதுக்காட்டுக்குளத்திலிருந்தே அதிகளவான மணல் அகழ்வு செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நன்னீர் மீன்வளர்ப்பிற்காக குறித்த குளம் அபிவிருத்தி செய்யப்படுவதாக காண்பித்து, அங்கு அகழ்வு மேற்கொள்ளப்படும் மணல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தே குறித்த பகுதி கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் கனரக வாகனங்களில் பெருந்தொகையான மணல் ஏற்றப்பட்டு வாகனங்கள் பயணிப்பதை அவதானிக்கப்பட்டது. இதேவேளை, குறித்த வாகனங்களை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதிக்கு சென்ற சிலர் போராட்டக்காரர்களை அச்சுறுத்தியதுடன், வாகனங்களை செலுத்தி மக்கள் மீது மோதும் வகையில் நடந்து கொண்டனர். இதேவேளை போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் போராட்டக்காரர்களிற்கும், மண்ணகழ்வில் ஈடுபடும் தரப்பிற்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றது.
உள்ளுர் திணைக்களங்களிற்கு அறிவித்தல் ஏதும் வழங்கப்படாது, கொழும்பில் உள்ள அதிகாரிகளால் குறித்த பணிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. கமநலசேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் தகவல் ஏதும் வழங்கப்படவில்லை என கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக்தினால் அப்பகுதியில் மண்ணகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், குறித்த அனுமதி முறையற்றது எனவும், அனுமதிக்கப்பட்ட 4 அடிக்கு மேலாக 12 அடிவரை மண்ணகழ்வு சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
குறித்த போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மூம் அனுப்பி வைப்பதற்காக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.சயந்தினியிடம் கையளித்தனர்.
அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் கொள்ளை சம்பவங்களிற்கு பளை கமநல அபிவிருத்தி திணைக்களமும் துணை போகின்றதா என்ற சந்தேகம் வலுக்கின்றது. குறித்த சட்டத்திற்கு முரணானதும், கண்காணிப்பற்றும் மேற்கொள்ளப்படும் மணல் திருட்டினை உடனடியாக நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வுண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



