அரசியல்வாதிகள் கருத்துரைப்பதற்கு முன்பாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களின் சமயலறைக்கு முதலில் சென்று சமயலறையில் நிலைமையை அவதானித்துவிட்டு கருத்துரைக்க வேண்டும் என்று, ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கதைப்பதற்கு முன்பாக மக்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டு இருக்கின்றனர் என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிந்துவிட்டு கதைக்க வேண்டும்.
மக்கள் சொல்லொனாத் துயரங்களை தற்போது எதிர்கொண்டுள்ளனர்.
மின்கட்டண அதிகரிப்பு, நீர்க்கட்டண அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்பவையால் மாதாந்தம் பெற்றுக்கொள்ளும் சம்பளம் என்பது எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.
கிடைக்கும் மாத சம்பளத்தில் குறித்த கட்டணங்கள் அனைத்தையும் செலுத்திவிட்டால் வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்களை வாங்குவதற்கு சம்பளம் போதுமானதாக இருக்காது. இவ்வாறான நிலையில் மக்கள் என்ன செய்வார்கள்?
எனவே அரசாங்கமானது மிக முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்ந்துப்பார்த்து தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அடுத்ததாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு போதிய பணம் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை போன்று செயற்படாது ஒரு நகைச்சுவையாளரை போன்றே நடித்து வருகின்றார்.