டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் இது குறித்து விபரித்துள்ளார்.
இதற்கமைய, கொழும்பு – செட்டியார் தெருவில் 04ஆம் திகதி சனிக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்திருந்தது, இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்த நிலையில், தங்கத்தின் விலையிலும் அது தாக்கம் செலுத்தியுள்ளது.
மேலும், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்றையதினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.