கடந்த ஆண்டின் இறுதியில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அது தொடர்பாக மேடைகளில் பேசியுமிருக்கிறார்.அவர் கூறியதன் சுருக்கம் வருமாறு… “தண்ணீர் போத்தல் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல வடமாகாணம் முழுவதையும் இப்பொழுது ஆக்கிரமித்து,நிறையப் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்துத் தண்ணீரைப்போல சுவையான தண்ணீர் ஒரிடமும் இல்லை என்று பேசப்பட்ட பல நூறு ஆண்டு வரலாறு பாழடைந்து விட்டது.யாழ்ப்பாணத்துக் கிணற்றுநீரைக் குடிக்கலாமா?இதுபற்றி உடனடியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், விவசாயத் துறை சார்ந்தவர்கள், பொருளியல் துறை சார்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள் ஒன்று கூடித் தெளிவுபடுத்த வேண்டும். குடாநாட்டில் மக்கள் குடிநீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக ஒரு தெளிவுறுத்தல் கூட்டத்தை நடத்தி,ஊடகங்கள் ஊடாக தண்ணீரைப் பாவிக்கலாமா ?என்ன செய்யலாம்? போத்தல் தண்ணி கலாச்சாரம்தான் இனி எங்களுடைய கலாச்சாரமா?அந்த போத்தல் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது? எப்படி யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்து சேருகிறது? என்பவற்றைத் தெளிவுபடுத்துங்கள்”.
ஆறு.திருமுருகன் மேற்கண்டவாறு கேட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களின் பின் கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் தேதி ஒரு செய்தி வெளிவந்தது. அதில்,வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வடமாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை வடக்கு மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் பாதுகாப்பானதா என்பது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தர வேண்டும் என்றும்பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்படும் குடிநீர் தொடர்பிலும் அறிக்கை தருமாறும் ஆளுநர் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.
மேலும்,வடமாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள்,மாகாண மற்றும் மத்திய அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் 13 வாரத்துக்கு ஒரு தடவை குடிநீரின் தர நிர்ணயம் தொடர்பில் அறிக்கை வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுள்ளார்.அது மட்டுமல்லாது வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும் என்றும், குறித்த செயற்பாட்டினை வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளூர் ஆட்சி அமைச்சின் செயலாளர்,மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆளுநர் பணித்துள்ளதாக அச்செய்தி மேலும் கூறுகிறது
ஆறு.திருமுருகன் கூறுவதுபோல,ஒருகாலம் கோயில் கிணற்று நீரைத் தீர்த்தம் என்று குடித்த மக்கள் இப்பொழுது தண்ணீர்ப் போத்தல்களை விரும்பி நுகர்ந்து வருகிறார்கள்.தண்ணீர்ப் போத்தல் கலாச்சாரத்தால் முதலாவதாக, உள்ளூர்க் கிணறுகளில் உள்ள தண்ணீர் சுத்தமற்றது என்று நிராகரிக்கப்படுகிறது. இரண்டாவதாக,பிளாஸ்டிக் பிரயோகம் அதிகரிக்கிறது.மூன்றாவதாக, போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் விரயம் செய்யப்படுகிறது. எவ்வாறெனில்,ஒரு போத்தலில் வழங்கப்படும் தண்ணீரை அனைவரும் முழுமையாக அருந்துவார்கள் என்று இல்லை. ஒருவர் அருந்திய போத்தலை இன்னொருவர் அருந்த மாட்டார். அதனால் மிச்சம் விடப்படும் நீர் விரயமாகிறது. நாலாவது, தண்ணீர் போத்தல் பாவனையால் தென்னிலங்கை முதலாளிகள் லாபம் ஈட்டுகிறார்கள்.ஐந்தாவது, பாவனையில் உள்ள தண்ணீர்ப் போத்தல்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்பட்டவையா என்பதனைத் தொடர்ச்சியாக யார் கவனிப்பது?
தண்ணீர்ப் போத்தல் எனப்படுவது உதிரியானது அல்ல. அது ஒரு உலகப் பொது நடைமுறை.அது ஒரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றது. அது நகரமயமாதல், உலகமயமாதலின் விளைவு. நமது கொண்டாட்டங்களை,நிகழ்வுகளை மண்டபங்களில் ஒழுங்குபடுத்தும்போது அந்த மண்டபத்துக்குரிய பக்கேஜுக்குள் தண்ணீர் போத்தலும் அடங்கும்.எனவே தண்ணீர்ப் போத்தல் கலாச்சாரம் என்பது உள்ளூர் வளங்களை நிராகரிக்கும் உலகமயமாதலின் விளைவுகளில் ஒன்று. எப்பொழுது மனிதர்கள் “ஃபாஸ்ட் பூட்” கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டார்களோ, எப்பொழுது மனிதர்கள் பேரங்காடிகளின் நுகர்வோராக மாறினார்களோ, அப்பொழுதே தண்ணீர்ப் போத்தலும் நமது வாழ்வில் ஒரு பகுதியாக, எமது நிகழ்வுகளின் ஒரு பகுதியாக எமது கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.எனவே தண்ணீர்ப் போத்தலை நிராகரிப்பது அல்லது உள்ளூர்க் கிணறுகளுக்குத் திரும்பிச் செல்வது என்பது ஒரு விதத்தில் உள்ளூர் மயமாதல்,அல்லது உலக மயமாதலின் தீய விளைவுகளை நிராகரித்தல் என்ற ஒரு புதிய பண்பாட்டுப் போக்கிற்குள் அடங்கும்.
எனவே தண்ணீர்ப் போத்தல்களுக்குப் பதிலாக உள்ளூர்க் கிணறுகளை நோக்கித் திரும்புங்கள் என்ற அழைப்பு தனிய ஒரு மதப்பெரியார் ஆகிய ஆறு திருமுருகனிடமிருந்து வந்தால் மட்டும் போதாது. அது ஒர் அரசியல்.அது ஒரு புதிய பண்பாட்டுக்கான அழைப்பு. அது ஒரு புதிய வாழ்க்கை முறைக்கான அழைப்பு. எனவே அதை ஒரு கூட்டுச் செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும்.
உள்ளூர் வளங்களை நிராகரித்தல் அல்லது அவமதித்தல் அல்லது உள்ளூர் வளங்களை உலகத் தராசுகளில் வைத்து நிறுத்தல் என்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் உரிய ஒரு போக்கு அல்ல.உள்ளூர் நீர் மூலங்கள் அசுத்தமானவை அல்லது உலக சுகாதார அளவுகோள்களின் ஊடாக பரிசோதிக்கப்படாதவை என்ற கருத்து படித்த தமிழர்கள் பலர் மத்தியில் உண்டு.
குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுமுறைக்கு நாடு திரும்பும்போது ஒரு கையில் தண்ணீர் போத்தலோடுதான் வருகிறார்கள். தண்ணீர் போத்தலோடு தான் எங்கும் திரிகிறார்கள்.அவர்கள் தங்கும் வீடுகளில் அவர்களுக்கென்று போத்தல் தண்ணீரை உறவினர்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள்.அவர்கள் உள்ளூர் கிணற்று நீரை நுகர மாட்டார்கள். எந்த நீரில் அவர்கள் பிறந்தார்களோ, எந்த நீரில் அவர்கள் வளர்ந்தார்களோ, அந்த நீரையே அவர்கள் இப்பொழுது சுகாதாரமற்றது என்று நிராகரிக்கக் காண்கிறோம்.
எனவே உள்ளூர் வளங்களையும் உள்ளூர் அறிவையும் உள்ளூர்த்தனங்களையும்,உள்ளூர்ப் பண்பாடுகளையும் உள்ளூர்ச் சாப்பாட்டையும் மேலுயர்த்தும் ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஒரு பகுதிதான் உள்ளூர் நீர் மூலங்களுக்கு திரும்பிச் செல்வது என்பது.அதைத் தனியாக ஒரு ஆறு திருமுருகன் மட்டும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களும், துறை சார் நிபுணர்களும், சமூகத்தின் எனைய கருத்துருவாக்கிகளும், ஏனைய மதத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இணைந்து அதை ஒரு கூட்டுச் செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும்.
மிகக்குறிப்பாக ஆறு திருமுருகன் தன் அறிக்கையில் கேட்டிருந்தது போல யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைசார் நிபுணர்கள் யாழ்ப்பாணத்தின் உள்ளூர் நீர் மூலங்கள் சுகாதாரமானவையா என்பதனை நிரூபிக்க வேண்டும். அதே சமயம் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வெளியில் இருந்து வரும் தண்ணீர் போத்தல்கள் சுகாதாரமானவையா என்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும்.
உள்ளூர் நீர் மூலங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சந்தேகங்களை நீக்க வேண்டிய பொறுப்பு இச்சமூகத்தில் வாழும் துறைசார் நிபுணர்களுக்கு உண்டு. இது தொடர்பில் ஏற்கனவே உள்ளூர் துறைசார் நிபுணர்கள் கவனிக்கத் தவறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். ஒரு காலம் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக போற்றப்பட்டது முள்முருக்கு. ஆனால் இப்பொழுது நாட்டில் முள்முருக்கு அரிதாகிவிட்டது. முள்முருக்கை ஏதோ ஒரு நோய் தாக்கியது. அதன் விளைவாக அதன் இலைகள் சுருளத் தொடங்கின. இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழகமும் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் யாராவது ஏதாவது நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்களா? முள்முருக்கு எனப்படுவது நமது திருமண வீடுகளில் கன்னிக்காலுக்கு பயன்படுத்தப்படுவது.இப்பொழுது பாரம்பரிய முள்முருக்கு இல்லாத காரணத்தால் சோடினை முள்முருக்கை நாங்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். இனி ஒரு காலம் பிளாஸ்டிக் முள்முருக்கையும் பயன்படுத்த வேண்டி வருமா?
முள்முருக்கு, தமிழ் மக்களின் பாரம்பரிய நீர் மூலங்கள் போன்றவை தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் பொதுவெளியில் உரையாட முன்வர வேண்டும். இதுதொடர்பில் வரும் சனிக்கிழமை 11ஆம் தேதி யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள,அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு நூல் வெளியீடு. கலாநிதி ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீஸ்வர இலக்கியம் என்ற ஒரு நூலை வெளியிட்டு வைக்கும் அந்நிகழ்வில் பொறியியலாளர் சர்வராஜா நினைவுப் பேருரை ஆற்றுகிறார். “யாழ் நீர் வளங்களின் மீதான ஆபத்துக்களும் வாய்ப்புகளும்” என்பது அந்த நினைவுப் பேருரையின் தலைப்பு ஆகும். தமிழ் மக்களின் உள்ளூர் நீர் மூலங்களின் மீதான விழிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அதுபோன்ற கருத்தரங்குகளை ஆர்வமுள்ளவர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்.இது ஒரு பொது விவாதமாக மாற்றப்பட வேண்டும். குடிக்கும் நீரின் நல்லது கெட்டது தெரியாத ஒரு சமூகமா நாங்கள் ?