நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களது மக்கள் சந்திப்பு கூட்டமானது வலிகாமத் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு கருத்து தெரிவித்தார்.
கேள்வி – 1
உள்ளூராட்சி மன்ற தேர்தலானது பல தடவைகள் தேதி குறிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் விரைவில் நடக்குமா அல்லது நடக்காதா? இது குறித்து தங்களது கருத்து எவ்வாறு அமைகிறது?
அரசியல் அமைப்பின் அடிப்படையில் தேர்தல் ஒன்று வைத்தே ஆக வேண்டும். மக்களுக்கு இந்த தேர்தல் வேண்டுமா இல்லையா என்பது வேறு கருத்து. இந்த தேர்தல் என்பது மக்களுடைய அடிப்படை உரிமை. அந்த தேர்தலை வேறொருவர் வைக்காமல் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
அந்த வகையில் தேர்தல் கட்டாயம் வைத்தே ஆக வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இந்த நிதியை அரசாங்கம் வழங்காமல் அதற்கான காரணியாக அவர்கள் தான் அமைக்கிறார்கள்
கேள்வி – 2
இந்திய மீனவர்கள் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி நெறி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. பயிற்சி வழங்காத நிலையிலேயே அவர்கள் இலங்கை மீனவர்களது வளங்களை அழிக்கிறார்கள், இந்நிலையில் பயிற்சி வழங்கினால் அவர்களது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என யோசிக்க வேண்டும். இது குறித்து தங்களது கருத்து?
நிச்சயமாக இது ஒரு பாரதூரமான ஒரு விடயம். அவர்கள் அவர்களுடைய மீனவர்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பதை தவிர, அவர்கள் எங்களது மீனவர்களுடைய மீனவர்களின் வயிற்றில் அடிக்கின்ற விடயம் இது.
எல்லை தாண்டி வருபவர்கள் எங்களுடைய மீனவர்களது வளங்களை அழித்து, அவர்களுடைய அடுத்த நாள் உணவை பறித்துக்கொண்டு போவதற்கு சமனான ஒரு விடயமாக தான் நாங்கள் பார்க்கிறோம்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நாங்கள் கட்சி பேதமின்றி பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீனவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இணைந்துள்ளோம். குடிமகன்கள் எவருக்கும் இந்த பிரச்சினை விளங்காமல் இருப்பது ஒரு சரியான விடயமாகும்.
கேள்வி – 3
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகத்திற்கு தங்களது கட்சியின் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தங்களது கருத்து?
கச்சேரியை நிர்வகிப்பது எனது வேலை அல்ல. எனக்கு கொடுக்கப்பட்ட பதவி, அதன் அடிப்படையில் எனது வேலைத்திட்டத்தை தான் நான் செய்தேன். அதாவது, கொடுக்கப்பட்ட அறை, கொடுக்கப்பட்ட அறையின் நிறம் இதையெல்லாம் நான் தீர்மானிப்பதில்லை. அந்த நிர்வாகம் தான் இதனை தீர்மானிக்கும்.
கேள்வி – 4
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு யாழ். மாவட்டத்தில் பல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இது இவ்வாறு இருக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றி யாழில் எவ்வாறு அமையும் என எண்ணுகின்றீர்கள்?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றி வாய்ப்பானது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்று கூறுவதை தாண்டி, நாங்கள் ஏற்கனவே செய்த வேலைத்திட்டங்களை எடைபோடுகின்ற ஒரு தேர்தலாக இது அமைகிறது.