
தனது பெயரில் ஜனநாயக சோசலிச குடியரசு என்று பெயரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது என்பதுதான் உண்மை என்ன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணிமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் காரைநகர் ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையினுடைய சிவில் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் ஜனநாயக ரீதியில், அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களுடைய குரலாகவும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மனிதாபிமான நெறிமுறைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மாறாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களினுடைய மாணவர்களுடைய குரல் வளையை அடக்க முற்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் அங்கு இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது. இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு அப்பால் இலங்கையானது உண்மையில் ஜனநாயகமற்ற போர்வையில் சர்வதிகார இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகின்றது.
கடந்த காலத்திலும் பல்வேறு சமயங்களில் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே இராணுவ பயங்கரவாத ஆட்சி நடைபெறுகின்றது என்று நாங்கள் சொல்லி வந்த குற்றச்சாட்டு முன்வைத்தோம். இம்முறை எங்களுடைய குற்றச்சாட்டு உண்மை என்பதை அவர்கள் நிரூபித்து இருக்கின்றார்கள்.
புத்தி ஜீவிகளான சிங்கள மக்களும், உண்மையை உணரக்கூடிய சிங்கள மக்களும் சர்வதிகார தேசமும் உணர்ந்து கொண்டு, இனப்படுகொலையாளிகளால் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைப்பதற்கு அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம் – என்றார்.