
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில நேற்றிரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 148 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், வவுனியாவில் கொரோனாத் தொற்று காரணமாக இருவர் நேற்று மரணமடைந்துள்ளனர். வவுனியாவின் தேக்கவத்தை மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 61 மற்றும் 76 வயதுடைய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின் உடல்களைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.