வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளில் ஈடுபட சகல ஊழியர்களும் தயாராக உள்ளார்கள்.ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் அசங்க சதுருவ தெரிவித்தார்.
அரச அச்சகத் திணைக்கள தலைவருடன் நேற்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28,29,30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடத்தவும்,பொது வாக்கெடுப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்தவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது,ஆனால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வாக்குச்சீட்டு அச்சிடும் விவகாரம் தொடர்பில் அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியககே ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு கருத்தை குறிப்பிடுகிறார்.வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளுக்கு நிதி ஒரு தடையில்லை நிதியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையே தடையாக உள்ளது என குறிப்பிடுகிறார். மறுபுறம் நிதி இல்லாமல் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என குறிப்பிடுகிறார்.
முரண்பட்ட இருவேறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்து அச்சகத் தலைவர் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார். வாக்குச்சீட்டு அச்சிடும் போது முழுமையான அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட நிதியில் பெருந்தொகையான நிதியை முற்பணமாக பெற்றுக் கொண்ட அச்சகத் திணைக்களம் பணிகளை முன்னொரு போதும் ஆரம்பிக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் போது ஒரு ரூபா முற்பணம் கூட செலுத்தப்படவில்லை. 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது 30 மில்லியன் ரூபா மாத்திரமே அச்சக பணிகளுக்காக வழங்கப்பட்டது. ஆகவே வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு நிதி ஒரு தடையில்லை.
வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் அரச அச்சகத் திணைக்கள தலைவர் பொய்யுரைக்கிறார்.தேர்தலை நடத்துவதற்காக வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளில் ஈடுபட சகல சேவையாளர்களும் தயாராக உள்ளார்கள். ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக அச்சகத் திணைக்கள தலைவர் வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு தடையாக செயற்படுகிறார்.