பலநாள் படகு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று (13.03.2023) நடைபெற்ற கலந்துரையாடலின்போது பலநாள் படகு உரிமையாளர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சரிடம் எடுத்துரைத்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் வீழ்ச்சி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் தமது தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு டீசல் விலையில் மானியங்களைப் பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தற்போதைய நிலையில் மீனின் விலை குறைந்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீன் ஏற்றுமதியின்போது அவற்றின் தரம் குறித்து பரீட்சிக்கப்பட்டு தரம் உறுதிப்படுத்தப்படும்போது மீன் ஏற்றுமதியாளர்களிடையே நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பலநாள் படகு உரிமையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நேற்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பலநாள் படகு உரிமையாளர்கள், அமைச்சின் மேலதிகச் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டிருந்தார்.