இலங்கையில் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கங்கள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அத்துடன், நாளை காலை 9 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளதோடு மேலும், திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

அதன்படி, 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடருந்து ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்கள், தொடருந்து நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அகில இலங்கை தாதியர் சங்கம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அகில இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், அரச மற்றும் அரச ஆதரவு தொழிற்சங்கக் கூட்டு, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் இந்த வாரம் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஆரம்பிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முதல் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட 4 மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களில் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதோடு, இன்றைய தினத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிடின் நாளைய தினம் சகல மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews