
கடன் பெற்றவர்களுக்கான சலுகைக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும் கோவிட் தொற்று பரவல் நிலை மற்றும் இதனால் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி குறித்த விடயங்களால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு சுற்று நிரூபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடன் பெற்ற, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வங்கிகள் இந்த சலுகையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.