இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்புகள் தொடர்பில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் உள்ள 43 வெளிநாட்டு தூதர்களில் 35 வெளிநாட்டு தூதுவர்களை பசில் ராஜபக்ச இதுவரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள வெளிநாட்டு தூதுவர்களை விரைவில் சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 2022ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய யோசனைகள் தொடர்பில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பசில் ராஜபக்ச ஏற்கனவே சந்திப்பு நடத்தி உள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய ஏனைய கட்சிகளுடனும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களுடனும் இதுகுறித்து பசில் ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அடுத்த வாரம் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கிராமிய மட்ட அமைப்பாளர்களை சந்தித்து வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பசில் ராஜபக்ச கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது