
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எங்களது கட்சிக்குத்தான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2018 தேர்தலில் அதிக சபைகளைக் கைப்பற்றியது நாங்கள்தான்.ரணில் விக்ரமசிங்க பிரதமரான போதும்சரி, ஜனாதிபதியான போதும்சரி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து அழைப்பு விடுகின்றார்.
சிலர் அந்த அழைப்பை ஏற்று அரசாங்கத்துடன் இணைந்தனர். சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.
தற்போது இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். அதைக் கெடுத்துக்கொள்ள முடியாது.
பொருட்களின் விலைகள் குறைந்து கொண்டு செல்கின்றன. தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.
டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எங்களது கட்சிக்குத்தான்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் அதிலும் எங்களுக்கே நட்டம்.
அதிகமான முதலமைச்சர்களும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களை நாம் இழந்துள்ளோம். எல்லோரும் இப்போது வீட்டில் என தெரிவித்துள்ளார்.