பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்து செயற்படும் வகையில் ஐக்கிய முன்னணி உருவாக்குவதற்கான முயற்சி சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இது விடயத்தில் முன்னிலையில் நின்று செயற்பட்டார். தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே இது விடயத்தில் கொள்கை ரீதியான இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. எனினும் தொடர்ந்தும் உரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுடனும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடனும் எதிர்காலத்தில் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று விவகாரங்களை உடனடியாக முன்னெடுப்பது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் முதலாவது தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பாக தென்னிலங்கை மக்களுடன் நேரடியாக உரையாடுவதாகும். தென்னிலங்கை அரசியல் சக்திகள் தவறான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புகின்றார்கள் என்பதற்காகவே நேரடியாக உரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவது அனைத்து தேர்தல்களிலும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுதலாகும். மூன்றாவது தமிழ்பேசும் மக்களுக்கு பொருத்தமான அரசியல் தீர்வினை இலங்கை என்ற அதிகாரக் கட்டமைப்புக்குள் பெற்றுக்கொடுப்பதாகும். அதுவரை இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும்படி அழுத்தங்களைக் கொடுப்பது என்றும் அதேவேளை மாகாணசபை முறையை தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தந்தத்தை முழுமையாக நிறைவேற்றுதல் என வரும்போது வடக்கு – கிழக்கு இணைப்புக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை கூட்டிருப்பு, கூட்டுரிமை, கூட்டடையாளம் என்பதை பேணுவதற்கு இணைப்பு மிக மிக அவசியம். ஆனால் முஸ்லீம் தரப்புக்கள் இதற்கு இணங்கும் என்று கூற முடியாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை ஆனால் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அது ஒருபோதும் இணங்காது. முன்னணியை விடுத்து ஐக்கிய முன்னணியை உருவாக்குவதிலும் பயன்கள் பெரிதளவிற்கு கிடையாது. பிரக்ஞைபூர்வ தமிழ்த்தேசிய சக்திகள் முன்னணியின் நிலைப்பாட்டுடனேயே அதிகம் ஒன்றித்துள்ளனர். பெரும்பாலான புலம்பெயர் தரப்புக்களும் முன்னணியின் கருத்துக்களுடனேயே நிற்கின்றன. எனவே 13வது திருத்தத்தை தவிர்த்து ஏனைய பொது விடயங்களை அடையாளம் கண்டு முன்னேற முயல்வதே ஆரோக்கியமாக இருக்கும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுடன் ஒரு சந்திப்பை இக்கட்டுரையாளர் கடந்த 12ம் திகதி மேற்கொண்டார். மனோகணேசனின் கொழும்பு இல்லத்தில் சுமார் இரண்டரைமணி நேரம்வரை இச் சந்திப்பு இடம்பெற்றது. தென்னிலங்கை அரசியல், வடக்கு – கிழக்கு அரசியல், மலையக அரசியல் என அனைத்து விவகாரங்களைப்பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது ஐக்கிய முன்னணி அமைக்கும் முயற்சி பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறிய இன்னோர் கருத்தும் மிகவும் முக்கியமானது. “போர்க்குற்ற விவகாரத்தை முன்னெடுப்பது ஒருபுறமிருக்க சர்வதேச அரங்கில் சிறீலங்கார அரசை அரசியல் குற்றவாளியாக்க சகல முயற்சிகளையும் செய்ய வேண்டும்” என்பதே அக் கருத்தாகும். தமிழ்த் தரப்பு இக் கருத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது.
தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கு எதிரான அருவருக்கத்தக்க நிலப்பறிப்பு, மொழி அழிப்பு, பொருளாதார சிதைப்பு, கலாச்சார சிதைப்பு உட்பட மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகள், அரசியல் யாப்பு உட்பட பாராளுமன்ற, வழக்காற்று சட்டங்களை நடைமுறைப்படுத்தாமை, அரச இயந்திரத்தை பேரின மயமாக்கல் என்பவற்றை பிரதான அரசியல் குற்றங்களாக சுமத்தி குற்றவாளியாக்கலாம். இதனூடாக குறைந்தபட்சம் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற பச்சை ஆக்கிரமிப்புக்களையாவது தடுப்பதற்கு முயற்சிக்கலாம். இந்த குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் தனித்து முன்வைப்பின் அது வலிமையான அழுத்தங்களை தராது. ஒடுக்கப்படும் தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் இணைந்து முன்னெடுக்கும்போதே அழுத்தம் வலிமையாக இருக்கும். சிங்கள இனம் தவிர்ந்த ஏனைய இனங்களுக்கு இலங்கைத்தீவில் இருப்பு இல்லை என்ற உண்மையும் வெளிப்படுத்தப்படும்.
இவை ஒருபுறமிருக்க தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல ஐக்கிய முன்னணிகள் இன்று அவசியமாக உள்ளன. தமிழ் அரசியலில் அடிப்படை சக்திகளாக இருப்பவர்கள் தாயகத்தில் வாழ்கின்ற மக்களும் அதன் நீட்சியாக புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்களுமாவர். சேமிப்பு சக்திகளாக இருப்பவர்கள் மலையக தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழித் தமிழர்களாவர். நட்பு சக்திகளாக இருப்பவர்கள் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளாவர்.
எனவே தமிழ் மக்களைப் பொறுத்தவரை முதலாவதும் முதன்மையானதுமான ஐக்கிய முன்னணி அடிப்படை சக்திகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணியாகும். தமிழ்த்தேசிய அரசியலின் அடிப்படை வலிமையே இவ் ஐக்கிய முன்னணியில்தான் தங்கியிருக்கின்றது. தேசிய இன ஒடுக்குமுறை என்பது அத்தேசிய இனத்திற்குப் புறத்தேயிருந்து வரும் ஒடுக்குமுறையாகும். தேசிய இனத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றுதிரண்டு இதற்கு முகம்கொடுக்க வேண்டும். தேசிய இனத்தில் பல்வேறு பிரிவுகள் கொள்கை நிலைப்பாடுகள் இருப்பதால் பல அமைப்புகள் தோன்றுவது தவிர்க்கமுடியாததாகும். இவை அனைத்தையும் ஒரு இலக்கை நோக்கி ஒன்று திரட்ட வேண்டும். ஐக்கிய முன்னணி இல்லாமல் இதனை சாத்தியமாக்க முடியாது. எனவே அடிப்படை சக்திகளுக்கிடையிலான ஐக்கிய முன்னணி மிக மிக அவசியமாகும்.
இரண்டாவது ஐக்கிய முன்னணி அடிப்படை சக்திகளான தாயகத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் இடையிலான ஐக்கிய முன்னணியாகும். இதற்காக “உலகத் தமிழ்த்; தேசியவாதம்” என்கின்ற ஒரு தேசியவாதத்தை கட்டியெழுப்பலாமா? என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் இதற்கான முயற்சிகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து “தமிழவன்”; போன்ற தமிழ்ப் புலமையாளர்கள் இதற்கான கருத்துத் தளத்தை உருவாக்குவதில் முன்னின்றனர்.
ஆயுதப்போராட்டம் பின்னடைவுக்குச் சென்றமை தமிழகப் புலமையாளர்களை கடுமையாகவே பாதித்திருந்தது. தமிழவன் “21ம் நூற்றாண்டு என்பதே தமிழர்களுக்கு எதிரான நூற்றாண்டா?” என ஒருதடவை கேள்வியெழுப்பியிருந்தார். தவிர தமிழவன் இன்னோர் கருத்தையும் கூறியிருந்தார். “தமிழர்களின் ஈன நிலை பற்றி சிந்தித்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள.; அவர்களில் ஒருவர் ஈ.வே.ரா.பெரியார். மற்றையவர் பிரபாகரன். முதலாமவர் அடிமைக்கூட்டமாக இருக்கும் தமிழனுக்கு முதல் முதலில் சுயமரியாதை வேண்டும் அதற்காக சுயமரியாதை இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று செயற்பட்டார். இரண்டாமவர் இவ் அடிமைக் கூட்டத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தனிநாட்டு போராட்டத்தை ஆரம்பித்தார்” என்றும் குறிப்பிட்டார்.
உலகத் தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்குமிடையே ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கு முன்னர் தாயகத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமிடையேயும், தாயகத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையேயும் ஐக்கிய முன்னணியை உருவாக்கி அதன் வளர்ச்சியில் உலகத் தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் இடையே ஐக்கிய முன்னணியை உருவாக்குவது ஆரோக்கியமாக இருக்கும்.
மூன்றாவது ஐக்கிய முன்னணி தாயகத் தமிழர்களுக்கும் தாயக முஸ்லீம்களுக்குமிடையேயான ஐக்கிய முன்னணியாகும். “ ஒரு தாயகத்தில் வசிக்கும் இரண்டு தேசிய இனத்தவர்கள் என்ற வகையில் இது மிக மிக அவசியமாகும்” இதன் வளர்ச்சி நிலையில் இலங்கைத் தீவில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களான தாயகத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள் இணைந்த ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கலாம். மனோகணேசனின் முயற்சி இத்தகைய ஐக்கிய முன்னணியை உருவாக்குவதே!.
நான்காவது ஐக்கிய முன்னணி தாயகத் தமிழர்களுக்கும் உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்குமிடையேயான ஐக்கிய முன்னணியாகும். சர்வதேச அரசியலை தமிழ் மக்களுக்கு சார்பாக வென்றெடுக்க இவ் ஐக்கிய முன்னணி மிகமிக அவசியம். இது விடயத்தில் “சர்வதேச அரசியலே ஒரு தேசியப் போராட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும்” என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை நினைவில் கொள்ள மறக்கக்கூடாது. உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய முன்னணிக்கு முதற்படியாக சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்.
இலங்கைத் தீவு சமூகமளவில் இரண்டாகப் பிளவுபட்டிருக்கும்போது சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்கு ஜனநாயக சக்திகளைத் தேடுவது கடினமாகவே இருக்கும.; அதற்காக முயற்சிகளை ஒருபோதும் நாம் விட்டுவிடக் கூடாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னர் சிங்கள இளம் தலைமுறையினரில் ஒரு பிரிவினர் பிரச்சினையின் வேரைத் தேடிச் செல்ல தொடங்கியுள்ளனா.; அதன்போது இனப்பிரச்சினைதான் அந்த வேர் என அடையாளம் கண்டுள்ளனர். எனவே அத்தகைய தரப்பினருடன் கைகோர்ப்பதற்கு தமிழ் தரப்பு தயங்கக்கூடாது.
தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமாவர். இவ்வாறான ஒரு இனம் தனது விடுதலைக்கு அக ஆற்றலில் மட்டும் தங்கியிருக்க முடியாது புற ஆற்றலையும் கட்டியெழுப்ப வேண்டும். புற ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்கு தாயகத்திற்கு வெளியேயான ஐக்கிய முன்னணிகள் அதிகம் பங்களிப்பை ஆற்றக் கூடியதாக இருக்கும்.
ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் அரசியல் மரபு ரீதியாகவே அடிப்படை சக்திகளிடையே கூட ஐக்கிய முன்னணியைக் கட்டுவதில் தோல்வியடைந்திருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி (1972), ஈழத் தேசிய விடுதலை முன்னணி (1985), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (2002), தமிழ் மக்கள் பேரவை (2016), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (2018) என அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
அடுத்தவாரம் ஐக்கிய முன்னணணிக்கான நிபந்தனைகள், சவால்கள், மார்க்கங்கள் என்பவற்றைப் பார்ப்போம்.