இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ் பிறழ்வுகள் நுழைந்ததைப் போலவே தென் ஆபிரிக்க பிறழ்வும் இலங்கைக்குள் நுழையக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை எதிர்கொள்வதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் எவையும் இல்லை. ஆரம்பம் முதல் பின்பற்றி வருகின்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘கொவிட்-19 வைரஸ் பிறழ்வுகள் இந்தியா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இனங்காணப்பட்டாலும் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளின் காரணமாக அந்த பிறழ்வுகள் இலங்கையிலும் பரவத் தொடங்கின.
எனினும் ஆபிரிக்க நாடுகள் இனங்காணப்பட்ட பிறழ்வுகள் இலங்கையில் பரவவில்லை.
எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய நாடுகள் அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்கள், அங்கிருந்து வருபவர்கள் ஊடாக எந்தவொரு வைரஸ் பிறழ்வுகளும் நாட்டுக்குள் நுழையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.
எந்த வகையான புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டாலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக முன்னேற்பாடுகள் செய்யப்படுவதில்லை.
ஆரம்பத்தில் செய்யப்பட்டதைப் போலவே எந்தவொரு நாட்டிலிருந்து வருபவர்களும் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.
அது மாத்திரமின்றி சகலரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதே பிரதானமானது’ என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.