ஆயுர் வேத ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள, ராஜபுர ஆயுர் வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், கொழும்பில் உள்ள, அலரி மாளிகையில் இருந்து, காணொளி தொழில்நுட்பம் ஊடாக பங்கேற்ற வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ராஜபுர வைத்தியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைத்து, கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
தொற்றா நோய்கள் பலவற்றுக்கு, சுதேச வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் மொனராகலை ராஜபுர ஆயுர் வேத வைத்தியசாலை, 40 நோயாளர்கள், ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ளது.
இந்த வைத்தியசாலையில், வெளி நோயளர் பிரிவு மற்றும் தங்கி சிகிச்சை பெறும் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு, இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த நிகழ்வில், வெல்லவாய சிறி பியரதன வித்யாயதனய விகாராதிபதி கந்தஉட பங்குவே சுதம்ம தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, ராஜபுர மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபன தலைவர் சுமித் ராஜபுர உள்ளிட்ட ஆயுர் வேத வைத்தியசாலை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சுதேச மருத்துவம், பணத்தை எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமல்ல என சுட்டிக்காட்டினார்.
எமது முன்னோர்கள் பாதுகாத்த, எமது சுதேச சிகிச்சை முறைகளை, அவ்வாறே எமது எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்து கையளிப்பது போன்றே, அதனை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவது, காலத்தின் தேவையாகும் என நாம் நம்புகின்றோம்.
அதற்காக சுமித் ராஜபுர போன்ற சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற, எமது நாட்டின் சுதேச வைத்தியர்கள் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை, ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எப்போதும் பாராட்டுகின்றோம்.
சுதேச வைத்தியம் என்பது எமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.
அன்று மேற்கத்தேய வைத்திய முறை பிரசித்தி பெறாத காலப்பகுதியில், சுதேச மருத்துவத்தின் மூலமே, மக்கள் பூரணமாக குணப்படுத்தப்பட்டனர்.
எவ்வாறான நோய்களுக்கும், அன்று கிராம நாட்டு வைத்தியர்களினாலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று உண்மையில், சரியான வைத்தியரை தெரிவு செய்வதில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
சிலர் வைத்தியர்கள் போன்று போலியாக செயற்பட்டு, மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
சிலர் தமது கல்வி அறிவுடன் தொடர்பற்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து, நோயாளர்களை துன்பத்தில் தள்ளுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள், சமூகத்தில் இருந்து விலக வேண்டும் என்பதே, எமது எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை, சுதேச வைத்தியம், ஆயுர் வேத மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அதன் முடிவுகளை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு திட்டமொன்றை தயார்ப்படுத்துமாறும், நாம் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம்.
அதனால், இதுவரை கண்டிராத ஒரு தரத்தை, இவ் அனைத்திலும் காண கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
அன்று சுதேச மருத்துவம், பணத்தை எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமல்ல.
என குறிப்பிட்டுள்ளார்.