தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று சனிக்கிழமை (18) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது.
பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் கலந்துகொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் பேராசிரியர் சிவசாந்தினி குகநாதன், வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச.சர்வராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொதுஅறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 100 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி.குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன.
முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி மாணவி அபிநயா சிவகரன் தங்கப்பதக்கம் வழங்கியும், இரண்டாம் இடத்தைப் பெற்ற திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி அம்சனா பேரின்பசிவம் வெள்ளிப்பதக்கம் வழங்கியும், மூன்ற இடத்தைப்பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி மாணவன் சிவகரன் அபிசாய்ராம் வெண்கலப் பதக்கம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுவரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை இம்முறை முல்லைத்தீவைச் சேர்ந்த திரு.நாகலிங்கம் கனகசபாபதிநேசன் பெற்றிருந்தார். இவருக்கு விருதோடு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் சிறந்த செய்கையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மாணாக்க உழவர்களாகவும், இராசதானியத் திட்டத்தின் கீழ் சிறுதானியச் செய்கையைச் சிறப்பாக மேற்கொண்டவர்கள் மாண்புறு உழவர்களாகவும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்விழா அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது . இலங்கையில் வழங்கப்பட்டுவரும் சூழல்சார் விருதுகளில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த முன்னிலை விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.