கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் சடலங்கள் வழமையை விட அதிகமாக காணப்படுவதால் சடலங்களை எரிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சம்மந்தமாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலமையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாம் நாளொன்றுக்கு ஜந்து சடலங்களை எரிப்பதாகவும் இன்று சடலங்களை எரிக்கும் இயந்திரம் பழுதடைந்ததால் நான்கு சடலங்களே எரிக்கப்பட்டது எனவும், எதிர் காலத்தில் அதிக சடலங்களை எரிப்பது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பரிசீலிப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி நாளொன்றுக்கு ஜந்திற்கு அதிகமான சடலங்களை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியதற்கு அமைவாகவே மாநகர முதல்வர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் யாழ் பொலிஸ் அதிகாரி, மாநகர உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் மற்றும் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.