நாவற்குழிப் பகுதியில் குடியிருப்புகளற்றுக் காணப்பட்ட வீதியோர காணிக்குள் புகைப்படக் கழிவுகளைக் கொட்டி எரித்த நிறுவனத்தினர் அந்தக் கழிவுகளை குழிவெட்டிப் புதைத்துள்ளனர்.
புகைப்பட ஸ்ரூடியோக் கழிவுகள் பெருமளவில் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு அந்தக் காணிக்குள் அண்மையில் எரிக்கப்பட்டன. குப்பையிலிருந்து எழுந்த புகையால் பாதிப்படைந்த அயலிலுள்ள இரு குடும்பங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் குடியிருப்புக்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து கழிவுகள் கொட்டுவதற்கு சூழல் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டதா என சாவகச்சேரி பொலிஸார் விசார ணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விடயம் ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து யாழ்ப்பாண சுகாதாரத் திணைக்கள சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பொறுப்பதிகாரி மருத்துவர் நிக்ஸன், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் சி.சுதோகுமார், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் க.கர்ணன் மற்றும் பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ம.பிரகாபரன் ஆகியோர் நாவற்குழிப் பகுதிக்குச் சென்று கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டதைப் பார்வையிட்டனர்.
அதன்பின்னர் கழிவுகளைக் கொட்டி எரித்த புகைப்பட நிறுவனத்தின் பிரதிநிதியை அழைத்து உரை யாடியதையடுத்து அதே காணியில் கனரக வாகனம் மூலம் குழி வெட்டப்பட்டு எரிக்கப்பட்ட கழிவுகள் புதைக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.