இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றது. இதன்போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் IMF நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) 2.9 பில்லியன் டொலருக்கான அங்கீகாரம் கிடைத்ததுடன், இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் வரை நிதியுதவியை அணுக உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தொிவித்துள்ளார். இதன்போது மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.