யாழ்.நகருக்குள் உள்ள கட்டடம் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த பழப்புளி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வர்த்தகருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது,
கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25ம் தேதி, பழப்புளி சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைப்பது குறித்து, யாழ்.நகர் பொதுசுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்ற சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையின் போது 6000 கிலோ பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மறுநாள் 26ஆம் திகதி மேலதிக நீதவான் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சந்தேக நபரும் 6000 கிலோ பழப்புளியும் பொதுச் சுகாதார பரிசோதகரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், புளியை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததன் பின்னர்,
புளியை அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டார். பின்னர் சந்தேக நபர் 36 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெற்றது. அந்த அறிக்கையில் பழப்புளி வண்டுகள் தாக்கிய நிலையில் காணப்படுவதாகவும், அது மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று 22.03.2023 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபருக்கு எதிராக 09 குற்றச்சாட்டுகளுடன் பொது சுகாதார பரிசோதகரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பொதுச் சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் சந்தேக நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன்
90,000/= தண்டப்பணமும் விதித்தது.