மலையக மக்கள் குறித்து அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

2023 March 22 ம் திகதி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளாகும்.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் நேரடி பங்காளர்களாக திகழும் மலையக மக்கள் இந்த நாளை பெருமகிழ்வோடு கோலாகலமாக கொண்டாட வேண்டிய தகுதிக்குரியவர்கள். ஆனால் அவர்கள் இந்த 200 ஆண்டுகளாக – தலைமுறை தலைமுறைகளாக அனுபவித்துவரும் அவலவாழ்க்கை வலிகள் நிறைந்தவை. இதனால் அவர்களால் இந்நாட்களை கொண்டாட முடிவதில்லை – அவர்களின் பெயரால் அடுத்தவர்கள் அதை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
200 ஆண்டுகால வலிகள் நிறைந்த மலையக மக்களின் வாழ்வோடு, உரிமைகளை கோரிய 200 ஆண்டுகால போராட்டமும் ஒருங்கே கொண்டது.
1823ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிரித்தானிய ஆட்சியாளர்களால் கூலித் தொழிலாளர்களாக எமது மலையக மக்கள் கொண்டுவரப்பட்டு மலையகத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். 200 வருடங்கள் கடந்திருக்கும் நிலையிலும் அவர்களுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை, சம்பளப் பிரச்சினை, சிவில் உரிமை என்பன மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளன.
நாட்டுக்கு 200 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் முதுகெலும்பாக நின்ற மக்களின் அவல வாழ்வு 20 தசாப்தங்கள் கடந்தும் தொடரும்போது, கொண்டாட்டங்களை எவ்வாறு அவர்களுக்காக – அவர்களோடு சேர்ந்து மேற்கொள்ள முடியும்?.
தமது உரிமைகளுக்காக போராடும் எமதருமை மலையக மக்களோடு, தமிழர்களாக நாமும் இணைந்து வலுச்சேர்க்க வேண்டும்.
இந்நேரத்தில், மலையக மக்களால் – மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் – என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Recommended For You

About the Author: Editor Elukainews