தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்க பல ஐக்கிய முன்னணிகள் தேவையென்றும் அவையே தமிழ் மக்களை ஒரு இலக்கு நோக்கி தேசமாகத் திரட்டும் என்றும் கடந்தவாரம் பார்த்தோம். அடிப்படை சக்திகளுக்கிடையேயும், அடிப்படை சக்திகளுக்கும் சேமிப்பு சக்திகளுக்கிடையேயும், அடிப்படை சக்திகளுக்கும் நட்பு சக்திகளுக்கிடையேயும் இவ் ஐக்கிய முன்னணிகள் தேவை என்றும் பார்த்தோம். இங்கு அடிப்படை சக்திகளாக தாயக, புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்களையும் சேமிப்பு சக்திகளாக உலகத் தமிழர்களையும், நட்பு சக்திகளாக உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் அடையாளம் காட்டினோம். இந்தவாரம் ஐக்கிய முன்னணிக்கான நிபந்தனைகள், சவால்களை, வெற்றிகொள்வதற்கான மார்க்கங்கள் என்பவற்றைப் பார்ப்போம்.
ஐக்கிய முன்னணிகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு மூன்று நிபந்தனைகள் அவசியமானவையாகும். அதில் ஒன்று அரசியல் நிலைப்பாட்டில் ஒருமைப்பாடாகும். இரண்டாவது சமத்துவ அந்தஸ்தாகும். மூன்றாவது வலுவான ஜனநாயக பண்புகளைக் கொண்ட அமைப்புப் பொறிமுறையாகும். இந்த மூன்றுக்குமிடையே சமநிலை காணப்பட்டால்தான் ஐக்கிய முன்னணி நிலைத்துநிற்கும்.
ஐக்கிய முன்னணிகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது அடிப்படை சக்திகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணியேயாகும். இங்கு மூன்று தரப்புக்கள் முக்கியமானவையாக உள்ளன. ஒன்று தாயகத்தில் செயற்படும் தமிழத் தேசிய அரசியல் கட்சிகள், இரண்டாவது தாயகத்தில் செயற்படும் பொது அமைப்புக்கள் மூன்றாவது புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் பொது அமைப்புக்கள் துரதிஸ்டவசமாக மூன்று தரப்புக்குள்ளும் பல முரண்பாடுகள் உள்ளன. இதனால் மேற்கூறிய மூன்று நிபந்தனைகளைப் பின்பற்றுவதிலும் பலவீனங்கள் உள்ளன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் இலக்கு இன அழிப்பிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதே! இதற்கு அரசியல் தீர்வுக் கோட்பாட்டு அடிப்படையில் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம், சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப் பொறிமுறை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். யாப்புச் சட்ட அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள்! கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்த இலக்கு வெளிப்படையான அரசியல் நிலைப்பாட்டில் மாத்திரமல்ல நடைமுறை அரசியலிலும் கடைப்பிடிக்கக்கூடிய நிலை இருத்தல் வேண்டும்.
தமிழ்த்தேசிய சக்திகளைப் பொறுத்தவரை இந்நிபந்தனைகளில் மிகப் பெரும் பலவீனம் காணப்படுகின்றது. அனைத்துக் கட்சிகளும் சுய நிர்ணயமுடைய சமஸ்டியே அரசியல் தீர்வு என கூறுகின்றன. ஆனால் நடைமுறையில் 13வது திருத்தத்துடன் திருப்திப்படும் நிலையில் பல கட்சிகள் உள்ன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் சுயநிர்ணசமஸ்டி என்ற இலக்கில் உறுதியாகஇல்லை என்ற அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் இலக்கில் உறுதியைக் காட்டியாலும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைப் பொறுத்தவரை கோட்டைவிடும் நிலையே உள்ளது. அது ஐக்கிய முன்னணிக்கும் தயாராகவில்லை. அதேவேளை தனது கட்சியை ஜனநாயக ரீதியாக பலமாக கட்டியெழுப்புவதற்கும் தயாராக இல்லை. கொழும்பு லிப்டன் சந்தியில் போராட்டம் நடாத்தும் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் போல் 20 பேருடன் போராட்டம் நடாத்துவதில் திருப்திப்பட்டுக்கொள்ளும் நிலையே உள்ளது.
இரண்டாவது நிபந்தனையான சமத்துவ அந்தஸ்தைப் பொறுத்தவரை அதிகூடிய பலவீன நிலை உள்ளது எனலாம். அரசியல் கட்சிகள் என்ற வகையில் இது எதிர்பார்க்கக்கூடியதே! அரசியல் கட்சிகளுக்கு தேர்தலும் கதிரையும், முக்கியமானவை. ஏனையவை இரண்டாம்பட்சமானவை. தேர்தல் போட்டியிருப்பதால் நான் பெரிது நீ பெரிது என்ற வாதமும் அதிகம். தமிழரசுக் கட்சி பெரியண்ணன் பாணியிலேயே செயற்பட முனைகின்றது. இதனால் அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணிகளும் தேர்தல் கூட்டுகளாக இருந்தனவே தவிர கொள்கைக் கூட்டுகளாக இருக்கவில்லை.
மூன்றாவது அமைப்புப்பொறிமுறை. இதுவும் ஏனைய நிபந்தனைகளைப்போல பலவீனமானது எனலாம். தமிழ்த்தேசியக் கட்சிகள் தன்னளவில் நிறுவனத்தன்மை வாய்ந்தனவாக இல்லை. வெறும் குழுக்களாகவே உள்ளன. ஜனநாயக நிறுவன வடிவம் எதனிடமும் கிடையாது. இவற்றிற்குள் தமிழரசுக் கட்சிதான் கொஞ்சமாவது ஜனநாயக நிறுவன வடிவத்தைக் கொண்டிருந்தது. அதையும்கூட சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்துவிட்டனர். தன்னளவில் ஜனநாயக நிறுவன வடிவங்களைக் கொண்டிராத கட்சிகள் ஜனநாயக நிறுவன பண்பைக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்குவர் என்றும் எதிர்பார்க்க முடியாது.
அடுத்தது பொது அமைப்புகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணி துரதிஸ்டவசமாக பொது அமைப்புக்கள் தமிழ்ச்சூழலில் மரபுரீதியாகவே பலவீனமானவையாக உள்ளன. தமிழ்ச் சமூகம் ஜனநாயக சமூகம் அல்ல. இதனால் ஜனநாயக ரீதியான பொது அமைப்புக்கள் வளர்வதற்கு சாத்தியங்கள் குறைவாக இருந்தன. தனிநபர் நிறுவனங்களே அதிகம.; யாழ்ப்பாணத்தில் முன்னர் இருந்த கூட்டுறவுச் சங்கங்களும், சில மீனவர் சங்கங்களும் இதற்கு விதிவிலக்கு எனலாம் ஆனால் தனிநபர் நிறுவனங்கள் வலுவாக வளர்ந்திருக்கின்றன. ஆறுமுகநாவலர் தொடக்கம் சி.வை. தாமோதரம்பிள்ளை, சுவாமி விபுலானந்தர் ஊடாக ஆறு திருமுகன்வரை இதற்கு உதாரணங்கள் அதிகம்.
பொது அமைப்புகளுக்கு தேர்தல் அரசியல் ஒரு பிரச்சினையாக இல்லை என்பதால் சம அந்தஸ்தைக் கட்டியெழுப்புவது கடினமல்ல ஆனாலும் முன்னாள் ஆயுத இயக்கங்களைப்போல குழு வாதங்கள் இங்கும் அதிகம். தவிர இங்குள்ள பொது அமைப்புக்களில் மூன்று வகையானவை உள்ளன. அரச சார்பற்ற அமைப்புக்கள், தொழிலை அடிப்படையாகக் கொண்ட சங்கங்கள், அரசியல் சமூகப் பணிகளை முன்னெடுக்கும் பொது அமைப்புக்கள் என்பவையே அவையாகும். இவற்றில் அரசசார்பற்ற அமைப்புக்களிடம் கொள்கை சார்ந்த செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாது. அவை தமக்கு நிதியளிக்கும் நிறுவனங்களின் நோக்கங்களை நிறைவேற்றுபவையாகும். தொழிலை அடிப்படையாகக் கொண்ட சங்கங்களில் மீனவர் சங்கங்களும் வர்த்தக சங்கங்களுமே சற்று பலமாவையாக உள்ளன. எனினும் தற்போது அவை கட்சிகள் சார்ந்து செயற்படும் சூழலே உள்ளது. போரினால் பாதிப்புற்ற பிரிவாக இருப்பதனால் நிவாரணங்களுக்கு அரசை எதிர்பார்க்கும் நிலையும் உண்டு. கொள்கை சார்ந்து செயற்படுவதில் அவற்றிற்கு தடைகள் அதிகம்.
அரசியல், சமூகப் பணிகளை மேற்கொள்ளும் பொது அமைப்புகளுக்கு புலம்பெயர் அமைப்புகளே நிதி உதவிகளைகளை வழங்கி வருகின்றன. அவை புலம்பெயர் தரப்பின் றிமோட்டில் இயங்குபவை எனலாம். இதனால் அங்கு குழுவாதங்கள் அதிகமாக உள்ளன. எனினும் தேர்தல் அரசியல் இங்கு ஆதிக்கம் செலுத்துவது குறைவாக இருப்பதால் இத் தரப்புக்களை ஒரு ஐக்கிய முன்னணிக்குள் கொண்டுவருவது கடினமாக இருக்காது.
பொது அமைப்புக்களை ஒரு ஐக்கிய முன்னணிக்குள் கொண்டுவந்தால் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களையும் ஒரு ஐக்கிய முன்னணிக்குள் கொண்டுவரலாம். அரசியல் கட்சிகளை ஐக்கியத்திற்குள் கொண்டுவருவதற்கு மிகவும் பிரச்சினையாக இருப்பது தேர்தல் அரசியல் தான். தேர்தல் அரசியலை கட்சி அரசியலில் இருந்து பிரித்துவிட்டால் இவற்றை சுலபமாக ஐக்கியத்திற்குள் கொண்டுவரலாம். வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பொறுப்பை கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் கொண்ட குழுவிடம் கையளிப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்கலாம். இச் செயற்பாட்டினூடாக சமத்துவ நிலையை உருவாக்கிவிட்டால் ஏனைய இரு நிபந்தனைகளையும் பூர்த்திசெய்வது கடினமாக இருக்கப்போவதில்லை.
அடுத்தது புலம்பெயர் அமைப்புக்கள். இன்றுள்ள சூழலில் புலம்பெயர்தரப்பின் பங்களிப்பு அதிகம். அங்கு ஐக்கியத்திற்கு தடையாக இருப்பது குழுவாதமும,; கட்சி சார்பு அரசியலும்தான். அண்மைக்காலமாக கட்சி சார்பு அரசியலிருந்து பலர் விடுபட்டு வருகின்றனர். இதை நீக்கிவிட்டால் மீதமாக இருப்பது குழுவாதங்கள் தான். மனம் திறந்த கலந்துரையாடல்களின் மூலம் அதிலும் முன்னேற்றங்களைக் காணமுடியும்.
தாயகத்தில் செயற்படும் பொது அமைப்புக்களுக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்குமிடையே ஐக்கிய முன்னணியை உருவாக்கிவிட்டால் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம்கொடுப்பது சுலபமாகிவிடும். இறுதியில் அரசியல் கட்சிகள், தாயகப் பொது அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் இணைந்து ஒருதேசியப் பேரியக்கத்தை உருவாக்கலாம். இதுதான் அடிப்படை சக்திகளுக்கிடையிலான உயர் ஐக்கிய முன்னணி ஆகும்.
உண்மையில் தேசியப் பேரியக்கத்தை உருவாக்குவது ஒரு கனவாக இருக்கலாம்.
ஆனால் வரலாறு வேண்டிநிற்பது இந்தப்பேரியக்கத்தைத்தான்.
அடுத்தவாரம் சேமிப்புச் சக்திகளின் ஐக்கிய முன்னணி நட்புசக்திகளின் ஐக்கிய முன்னணி என்பவற்றைப் பார்ப்போம்.