
யாழ்ப்பாணம், சங்கரத்தை – துணைவி சந்திக்கு அருகாமையில் உள்ள நாச்சார் வீட்டில் காண்பியக்கலை கண்காட்சி அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – இருபாலையைச் சேர்ந்த சமகால காண்பியக் கலைஞனான தவராசா தஜேந்திரன் என்பவரது காண்பியக்கலை ஓவியங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அந்த கலைஞன் கருத்து தெரிவிக்கையில்,
இந்தக் கண்காட்சியில் கவிதை, ஓவியம், தியானம் ஆகிய மூன்றினையும் ஒன்றிணைத்த பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பாடு பொருளாக இன்மை என்னும், அதாவது நமது மனதில் இருத்தல், உருவாகுதல் ஆகிய இரண்டு வேறுபட்ட மன நிலவரங்களுக்கு இடையில் பேசப்படாத பொருளாக காணப்படும் இன்மை என்ற மனநிலவரம் பற்றி இந்த படைப்புகளின் ஊடாக நான் பேசுகிறேன்.
நிலம்சார் மூலப் பொருட்களை பயன்படுத்தி, அதாவது சாம்பல், தூசி துணிக்கைகள் ஆகிய நிச்சயம் இல்லாத இயற்கை சார்ந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி என்னுடைய படைப்புக்களை உருவாக்கி காட்சிப் படுத்தியுள்ளேன்.
இந்தக் காட்சியானது 26, 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் மாலை 6 மணிவரை பார்வைக்காக இருக்கும் என்பதை அறியத்தருகின்றேன் – என்றார்.’












