உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில்,தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் எதிர்வரும் வாரத்தில் நடை்பெறவுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தை எதிர்வரும் ஏப்ரல் 4ம் இடம்பெறும். இதற்காக தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை நேற்று (28) நடத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. இந் நிலையிலே, காலவரையறையின்றி அத்தினம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், ஏப்ரல் 25 இல், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாதுபோயுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதற்கிணங்க பிரதமருடனான அந்தப் பேச்சுவார்த்தை ஓரிரு தினங்களில் இடம்பெறுமென, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.