வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் காணாமலாக்கப்பட்டு சிவன் ஆலயம் முற்றாக சிங்கள பேரினவாதிகளால் அழிக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது.
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பல வருடங்களாக சிங்கள பேரினவாதிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இன,மத அடையாளங்களை முழுவதுமாக அழிக்கும் செயற்பாடுகளை அரச இயந்திரத்தின் உதவிகளுடன் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றது.
மேலும் இவ்வாறான தமிழின அழிப்பு செயற்பாடுகளுக்குப் பின்னால் பௌத்த மகாசங்க பேரினவாத சக்திகள், தொல்பொருள் திணைக்களம், சிறிலங்கா இராணுவம் மேலும் பல அரச இயந்திரங்கள் நேரடியாகவே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த இனவாத செயல்களை ஒட்டுமொத்த தமிழர்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் ராஜபக்ச அரசாங்கம், கோட்டா அரசாங்கம் என வழிவந்த ரணில் அரசாங்கமும் மீண்டும் தமிழ் மக்களை வேரோடு அழிப்பதற்கு கங்கணம் கட்டி விட்டது. சிங்கள பேரினவாதம் இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவில்லை எனில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றோம். தொடர்ந்தும் சிங்கள பேரினவாதம் தமிழினத்தின் மீது தொடுக்கும் அராஜக செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
மேலும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்களத்தினர் குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தடை விதித்து வந்தநிலையில் பிரதேச மக்களின் நெருக்கடி மற்றும் போராட்டம் கொண்ட முயற்சியினால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவ்வாறிருக்கையில் தான் சிங்கள பேரினவாத அரசு இவ் ஆலயத்தை முழுவதுமாக அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.