
மீசாலையின் அடையாளமாக திகழ்ந்த பழம்பெரும் பயணிகள் தரிப்பிடத்தை இடித்து அழித்த சாவகச்சேரி நகரசபை
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை சந்தியில் உள்ள 50 வருடங்களுக்கு மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணிகள் தரிப்பிடத்தை சாவகச்சேரி நகரசபை முற்றாக இடித்து அழித்துள்ளது.

மீசாலை சந்தியில் பழைய புகையிரத நிலையம் அமைந்திருந்த காலத்தில் இருந்து தென்மராட்சி மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்திருந்த பயணிகள் தரிப்பிடமே இன்று காலை சாவகச்சேரி நகரசபையின் கனரக இயந்திரம் மூலம் முற்றாக இடித்து அழக்கப்பட்டுள்ளது.
1995 இடப்பெயர்விலும், யுத்த காலத்திலும், அதற்கு முன்னரும் யாழ்ப்பாண மக்களின் பல்வேறு வரலாற்று உணர்வுகளின் அடையாளமாக குறித்த பேருந்து தரிப்பிடம் விளங்கியது.
குறித்த பயணிகள் தரிப்பிடம் ஏ 9 பிரதான வீதி புனரமைக்கப்பட்ட போதும், புகையிரத பாதை அமைக்கப்பட்ட போதும் இரண்டு திணைக்களங்களாலும் இடித்து அகற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சாவகச்சேரி நகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டு 10 நாட்களுக்குள் மீசாலையின் அடையாளமாக திகழ்ந்த பயணிகள் தரிப்பிடம் அழிக்கப்பட்டமை தென்மராட்சி மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏ9 வீதியில் சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமைவாய்ந்த பேரூந்து தரிப்பிடங்கள் நகரசபையால் இடித்து அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


