எழுதுமட்டுவாழில் கஞ்சா பொதி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேடப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சட்டத்தரணிகள் மூலம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த 9 ஆம் திகதி அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொடிகாமம் பொலிசார் எழுதுமட்டுவாழில் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது, 16 கிலோக்கிராம் கேரள கஞ்சா பொதியை கைவிட்டு இருவர் தப்பியோடினர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் மீட்கப்பட்டது. அந்த மோட்டார் சைக்கிள் மன்னார், சிலாவத்துறையில் கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் பெயரில் பதிவாகியிருந்தது.
அந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கடத்தலுடன் தொடர்புடைய மற்றொருவரும் கைதானார்.
அவர் பெருந்தொகை பணத்தை பரிமாற்றம் செய்து வந்த விபரங்களையும் பொலிசார் கண்டறிந்தனர். கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். தனது மோட்டார் சைக்கிளை மூத்த சகோதரனே பயன்படுத்துவதாக தெரிவித்தார். அவரது மூத்த சகோதரனும் பொலிஸ் உத்தியோகத்தரே. அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர். இந்த சமயத்தில் அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை சட்டத்தரணிகள் மூலம் அவர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் சட்டத்தரணியுமான கே.சயந்தன் உள்ளிட்ட 3 சட்டத்தரணிகள் ஊடாக அவர் சரணடைந்தார்.
சரணடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க கொடிகாமம் பொலிசார் அனுமதி கோரினர். எனினும் , நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்து, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.