தமிழர் தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக நாளை சனிக்கிழமை சங்கானை சந்தை முன்பாக காலை 9.30 மணிக்கு அறவழியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
குருதி சிந்திய போர் முடிவுக்கு வந்தாலும் இந்தத் தீவிலிருந்து தமிழர்களை துடைத்தெறியாமல் சிங்கள தேசம் ஓயாது. அது தனது கோரப்பற்களை இன்னமும் திறந்தே வைத்திருக்கின்றது. ஓர் இனத்தை அழிக்கவேண்டுமாயின் அதன் கலாசாரம், நிலம், பண்பாடு மீது கைவைக்கவேண்டும்.
பௌத்த – சிங்களப் பேரினவாதம் அண்மைக்காலமாக தமிழர் தாயகத்துக்கு எதிராக இந்தப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது.
எமது இனவழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு யாரும் வரப்போவதில்லை. பல்லாயிரம் உயிர்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்டபோது வராத எந்தவொரு தரப்பும் இப்போதும் வரப்போவதில்லை.
எமது மண்ணை எங்களின் இருப்பை பாதுகாக்கவேண்டுமானால் நாம்தான் போராடவேண்டும்.
வெடுக்குநாறியில் ஆதிலிங்கேஸ்வரரை அடித்துடைத்திருக்கிறார்கள், கிண்ணியா வெந்நீர் ஊற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள், குருந்தூர் மலையில் விகாரையை கட்டி மகிழ்கிறார்கள், கச்சதீவில் புத்தனை குடியேற்றுகிறார்கள். இந்தப் பட்டியல் கடந்த ஒரு மாதத்தில் அரங்கேறிய புத்தனின் சீடர்களின் அட்டூழியங்கள் மட்டுமே.
இது இத்துடன் முடியப்போவதில்லை.
எதிர்ப்புக்கள் பலமானால் மாத்திரமே அவர்களின் ஆக்கிரமிப்புக்கள் மெல்ல அடங்கும். அவர்களின் மொழியில் அவர்களுக்குச் சொன்னால் மாத்திரமே புரியும். நாம் அமைதியாக கடக்கும் ஒவ்வொரு நொடியும் எங்களின் தேசத்தை கறையான்போன்று பௌத்த – சிங்கள பேரினவாதம் அரித்துக்கொண்டேயிருக்கும்.
விழித்தெழுந்து போராடவேண்டிய நிர்பந்தம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இனவழிப்பை எதிர்த்து குரல்கொடுக்க ஒவ்வொருவரும் வரவேண்டியதன் அவசியத்தை காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது. எங்களின் பலவீனம்தான் எதிரியின் பலமாகிறது. நாங்கள் பலமானவர்களாக எங்கள் எதிர்ப்பை பதிவுசெய்ய நாளை அணிதிரளுங்கள் என்று அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.