
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சில உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, தமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் (01.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, கட்சியின் சில உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, தமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருகின்ற போதிலும், அது சாத்தியப்படாது.
நாட்டை கட்டியெழுப்ப நிதியில்லாத அரசாங்கம், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சிக்கின்ற இந்த சூழ்நிலையில், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் நிதியில்லாமலேயே எதிர்க்கட்சியுடன் இணையத் தயாராக உள்ளனர்.
அத்துடன், அரசாங்கம் அரசியலமைப்பை மீறித் தேர்தலைச் சீர்குலைத்து வருகின்றது எனவும் அதையும் தாண்டி புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து நாட்டின் மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.