கிளிநொச்சியில் குண்டர்களால் தாக்கப்பட்ட மாணவிக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை – ஆளுநருக்கு தாயார் முறைப்பாடு

அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் மாணவி ஒருவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த மாணவியின் தலையில் பலமாக தாக்குதல் இடம் பெற்ற நிலையில் ஆறுக்கு மேற்பட்ட தையல்கள் போடப்பட்டது.
எனினும் கிளிநொச்சி வைத்திய சாலையில் மாணவியின் தலைப்பகுதி தொடர்பில்  “எக்ஸ்ரே” ஒளிப்படம் எடுக்கப்படாததோடு உடலின் ஏனைய பகுதிகளில் அடி காயங்கள் தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாகம் கண்டு கொள்ளாமை தொடர்பில் வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த விடயம்  தொடர்பில் கரிசனை செலுத்திய வட மாகாண ஆளுநர் நேரடியாக பாதிக்கப்பட்ட தாயாருடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
அதன் போது பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தனது பிள்ளைக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை தொடர்பில் மன வருத்தத்துடன் இடம் பெற்ற சம்பவங்களை கூறினார்.
குறித்த மாணவியின் தலைப்பகுதியின் செயற்பாடுகள் தொடர்பில் எக்ஸ்ரே ஒளிப்படம் மூலம் மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியதுடன் இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின்  அறிக்கையையும் உடனடியாக வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிப்பாளருக்கு பணிப்புரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது வடமாகாண கல்வி அமைச்சை குறித்த மாணவி தாக்கப்பட்ட சம்பவம் முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றது வரை விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews