அரசாங்கத்தின் நோக்கத்தை நீதிமன்றத்தின் ஊடாக முறியடிப்போம் -ஐ.ம.ச

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் சகலரையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் நோக்கத்தை நீதிமன்றத்தின் ஊடாக முறியடிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத தடைச் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத தடைச் சட்டமூலத்தில் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயமும் உள்ளடக்கப்படவில்லை என நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.

இந்த சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தியதன் பின்னரே உண்மையை தெரிந்துகொள்ள முடியும்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் காட்டிலும் பயங்கரவாத ஏற்பாடுகளை உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுள்ளது.

பயங்கரவாதம் என்ற பதத்திற்கு அரசாங்கம் நீண்ட விளக்கத்தை அளித்து, அதில் மக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் சகலரையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் வகையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் நோக்கத்தை நீதிமன்றத்தின் ஊடாக முறியடிப்போம்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் தன்னிச்சையாக செயற்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை மதிக்காமல் நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணித்து நிறைவேற்றுத் துறையின் ஆலோசனைக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகள் எதிர்காலத்தில் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews