கடற்படையினராலும் அவர்களிற்கு காணியினை அளவீடு செய்து வழங்குவதாலும் கிராமத்தில் தொழில் புரிவோர் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதுடன் எதிர்காலத்தில் நங்கூரமிடும் துறைமுகங்கள் போன்றவற்றை அமைக்கவும் இடையூறாக அமையுமென கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாரத்தனை தம்பாட்டி கடற்படையினரிற்கு கிராமத்தில் காணி அளவீடு மற்றும் கடற்படை முகாமிற்கு எதிராக போராட்டத்தினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாரந்தனை வடக்கு தம்பட்டி கிராமத்தில் கடற்படை பகுதியில் அமைத்துள்ள கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக நில அளவை திணைக்களம் வருகை தந்துள்ளது.
இதனை அறிந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடற்படை முகாமினை அகற்றுவதுடன், நில அளவீட்டினையும் தடுக்கும் முகமாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கடற்தொழிலாளர்கள் மீன் பிடிக்க இறங்கு துறைக்கு செல்லும் பாதையிலே காணி இருப்பதனால் படகுகளினை கொண்டு சென்று கடலில் இறக்கவும் கடினமாக அமையும்.
அத்துடன் எதிர்காலத்தில் நங்கூரமிடும் துறைமுகங்களை அமைக்கும் பொழுதும் இடையூறாக அமையும் என்பதனை பிரதேச குழு ஒருங்கிணைப்பு கூட்டம், காணி பயன்பட்டு ஒருங்கிணைப்பு கூட்டம் போன்றவற்றில் மக்களினால் முன்வைக்கப்பட்டு குறித்த காணியினை வழங்க முடியாதென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தற்போதைய செயற்பாடுகளுடன் எதிர்கால செயற்பாடுகளிற்கு இடையூறாகவும் அமையும் என்பதை பல கடற்படை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
மேலும் இது துறைமுகத்தின் அழகினையும் சீர்செய்வதாக அமைகின்றது.
அத்துடன் காணி அளவீடு செய்யப்படுவது தொடர்பாக மக்களுக்கு முன்னறிவிப்பு விடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.