உலக வங்கியின் இலங்கைக்கான திட்டம் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்

உலக வங்கியானது இலங்கைக்கு பங்களிப்பினை வழங்கும் நோக்கில் மக்களின் தேவைகளை உள்வாங்கி நான்கு வருட காலப்பகுதிக்கான இலங்கைக்கான பங்குடமைச் சட்டக திட்டமொன்றினை தயாரித்து வருகின்றது.

அதனடிப்படையில், இந்த திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தினை உள்வாங்கி அதன் தேவைகளை உள்ளடக்கியதாக மாவட்டத்திற்கான திட்டத்தினை தயாரிக்கும் நோக்கில் உலக வங்கியின் முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (06.04.2023) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் இணையவழி செயலி ஊடாக இணைந்திருந்தார்.

இத்திட்டமானது பொருளாதாரத்தை மேம்படுத்தி, பசுமையான தாங்குதிறன் கொண்ட அபிவிருத்தியை நிலைநிறுத்தி, அதனூடாக வறிய மக்களை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் குறித்த திட்டத்தின் அறிமுகம் தொடர்பாக கலந்து கொண்டிருந்தவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இறுதியாக சகல தரப்புக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி சிறந்த பங்குடைமை சட்டகத்தை உருவாக்கும் நோக்கில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், கிராமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் இலங்கைக்கான ஆலோசகர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உலக வங்கியின் அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்டச் செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews